பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 43

கூராழி யேத்திய பல்லவற்குக் கூடல் மன்னவற்குப்
பாராழி சூழ்ந்திசை பரிக்குப் பந்தி பண்டடைந்த
நீராழி வேழங்க ணீராடு மாமடு நின்றகொற்றப்
போராழி வெற்பிவன் செங்கோல் நடக்கும் பெருவழியே.     3

தொழுதிய லாமன்னர் தொண்டைத் திருநாடு கொண்டவரூர்
கழுதிய லக்கண்ட காடவன் பல்லவன் காசினிமேற்
பழுதிய லாத்தனிச் செங்கோல் நடாத்திப் பராக்ரமஞ்சென்
றெழுதிய தூணங்க ளெண்டிசை சூழ்ந்த வெழுகிரியே.     4

கைம்மலை வெள்ளக் கடற்படைப் பல்லவன் காடவர்தஞ்
செம்மலை வந்து பணியா வடமன்னர் சேனைவிட்டுத்
தம்மலைவிட்டுப் புறமலை வேலித் தலத்துளஞ்சா
தெம்மலை யெச்சுரத்துப் புகுவார் புக்கிருப்பதற்கே.     5

வண்டற் புனற்பெண்ணை நாடுடையான்
     வடவேங் கடவெற்பன்
தொண்டைத் திருநாடு தோள்வலியாற்
     கொண்ட தொண்டைமன்னன்
கண்டற் கடற்கச்சிப் பல்லவன்
     காடவன் காரிருளிற்
பண்டைப் பிரமவர்க் கன்பிலாப்
     பொற்பதாம் புயனே.     6

குறிப்பு:- இச்செய்யுட்களில் மூன்றாவதான “கூராழியேந்திய” என்னும் செய்யுள், வட ஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, ரங்கம்பேட்டைக்கு அருகில் உள்ள மோரி ஜொனை என்னும் இடத்தில் ஒரு பாறைமேல் எழுதப்பட்டுள்ளது (தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு, 127-ஆம் எண் சாசனம்). அந்தச் சாசனச் செய்யுளின் மேலே சிதைந்துபோன சாசன வாசகம் எழுதப் பட்டிருக்கிறது. அதன் வாசகம் இது: “கூடல் ஆளப்பிறந்தார் மகனார் தொண்டை மண்டலங் கொண்ட பல்லவாண்டாரான வீரர் வீரன் காடவராயர் ... ... ... ...”