பக்கம் எண் :

64மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

ஏந்து மருவி யிரவி புரவியின்முன்
பூந்து வலைவீசும் பொதியிலே - காந்துசின
வேணாடனை வென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப்
பூணாரம் பூண்டான் பொருப்பு.    1

புயலுந் தருவும் பொருகைப் புவநேக வீரபுனல்
வயலுந் தரளந்தரு கொற்கை காவல வாரணப்போர்
முயலுங் கணபதி மொய்த்த செஞ்சோதி முகத்திரண்டு
கயலுண் டெனுமதுவோ முனிவாறிய காரணமே.    2

வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே
பொங்கி வடதிசையிற் போகாதே - யங்கிருப்பாள்
பெண்ணென்றும் மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப்
பண்ணொன்றும் வேய்வாய் பகை.    3

குறிப்பு :- இங்குக் கூறப்படும் விக்கிரம பாண்டியன், சடைய வர்மன் விக்கிரம பாண்டியன் ஆவன். இவனுக்குப் புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. 13-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்தவன். இவன், சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டி நாட்டின் ஒரு பகுதியை அரசாண்டான்.

செய்யுள் 2. விக்கிரம பாண்டியனுக்குப் புவனேக வீரன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. இவன் காகதீய அரசன் வீரகண்ட கோபாலனைப் போரில் கொன்றான். பிறகு, அவன் உறவினனாகிய கணபதி என்பவன் இவனிடம் நட்பு கொள்ள, அவனுக்கு அரசை அளித்தான். இச் செய்தியைக் குறிக்கிறது இச்செய்யுள்.

செய்யுள் 3. “பொங்கி வடதிசையிற் போகாதே அங்கிருப்பாள் பெண்” என்பது, தெலுங்கு தேசத்தின் ஒரு பகுதியைக் காகதீய குலத்தில் வந்த ருத்ராம்பா என்பவள் அரசாண்டதைக் கூறுகிறது. இந்த இராணி ருத்திரதேவ மகாராஜ என்னும் ஆண்பெயர் பூண்டு அரசாண்டாள் என்று பிரதாபருத்தீரீயம் என்னும் நூல் கூறுகிறது. பெண்ணின் மேல் போருக்குச் செல்வது அரசருக்கு மரபன்று என்பதை இச்செய்யுள் கூறுகிறது.