பக்கம் எண் :

140மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

“எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை
மையறு கேள்வி கேளா தோர்க்கே.”     1

(தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடினது, 55ஆம் தாழிசை உரை மேற்கோள்)

“பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும்
பெருங்குறை வாங்கி வலங்கையிற்
பூமுத லிருந்த நான்முகத் தனிச்சுடர்
வேதம் பாடிய மேதகப் படைத்தன
எண்பெரு வேழம்.”     2

(தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 22ஆம் தாழிசை உரை மேற்கோள்)

இரும்பல் காஞ்சியிலிருந்து மூன்று செய்யுள்களைப் புறத்திரட்டில் தொகுத்திருக்கிறார்கள். அச் செய்யுள்கள் பின்வருவன:

“நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக்
காலை யிருள்சீக்குங் காய்கதிர்போல்-கோல
மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன்
அணிச்சே வடியெம் அரண்.”     1

“ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த
பேரருளி னாற்குப் பெறலருமை யாதரோ
வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்
போர்மலைந்து வெல்லும் புகழ்.”     2

“கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம்
இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற்
பெரும்பெய ரேனத் தெயிறனைய வன்றே
சுரும்பறை தொண்டையான் தோள்.”     3

இந்நூலைப் பற்றிய ஏனைய செய்திகள் தெரியவில்லை.

15. இளந்திரையம்

இப்பெயருடைய நூலை, ஆசிரியர் மயிலைநாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்ற சாதவாகனம், இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார்.