பக்கம் எண் :

172மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

என்று அவர் எழுதுவது காண்க.

“அவர்க்கு (இடைச்சங்கத்தார்க்கு) நூல் அகத்தியமும், தொல் காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூத புராணமும் என இவை என்ப” என்பது இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரம்.

இந்நூலினின்று கீழ்க்காணும் செய்யுள்களை அடியார்க்கு நல்லார் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார் :

“‘வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்
றிந்நான் கெல்லை தமிழது வழக்கே’

என்றார் சிகண்டியாருமாகலின்.”

(சிலம்பு. வேனிற்காதை-வரி.1 உரை. மேற்கோள்.)

“இடைபிங் கலையிரண்டு மேறும் பிராணன்
புடைநின் றபானன்மலம் போக்கும் - தடையின்றி
யுண்டனகீ ழாக்கு முதானன் சமானனெங்குங்
கொண்டறியு மாறிரதக் கூறு.     1

எனவும்,

கூர்ம னிமைப்புவிழி கோணாகன் விக்கலாம்
பேர்வில் வியானன் பெரிதியக்கும் - போர்மலியுங்
கோபங் கிருகரனாங் கோப்பி னுடம்பெரிப்பத்
தேவதத்த னாகுமென்று தேர்.     2

எனவும்,

ஒழிந்த தனஞ்சயன்பே ரோதி லுயிர்போய்க்
கழிந்தாலும் பின்னுடலைக் கட்டி - யழிந்தழிய
முந்நா ளுதிப்பித்து முன்னியவான் மாவின்றிப்
பின்னா வெடித்துவிடும் பேர்ந்து     3

எனவும் இசைநுணுக்கமுடைய சிகண்டியாரும் கூறினாராகலின்.”

(சிலம்பு. அரங்கேற்று காதை, 26ஆம் அடி, உரை, மேற்கோள்)

“அன்றி இசைப்பா, இசையளவுபா வென்னும் இரு பகுதியுள் இஃது இசைப்பாவின் பகுதியென்ப. அது பத்து வகைப்படும்: செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெரு வண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டில மென. என்னை?