174 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
சிலேயோ” எனவரும் தக்கயாகப் பரணி (தேவியைப் பாடியது - 15) உரையைக் காண்க. இனி, யாமளேந்திரர் என்னும் பெயரும் இவருடைய இயற் பெயர் அன்று; சிறப்புப் பெயர் ஆகும். என்னை? தேவியைப்பற்றிக் கூறும் நூல்களுக்கு யாமள நூல் என்பது பெயர். இதனை, தக்கயாகப் பரணி (கோயிலைப் பாடியது - 1) உரையினால் அறியலாம். “யாமள சாத்திரத்தினாற் சொல்லப்படுகின்ற ஈசுவரியின் பதிணெண் கண நாதராலும் விரும்பப்படுகின்ற கோயில்” என்று அவ்வுரை கூறுவதி லிருந்து அறியலாம். எனவே, இந்திரகாளியம் என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றிய பாரசவ முனிவராகிய யாமளேந்திரர் என்பவர் தேவியைப் பூசை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிகின்றது. இந்திரகாளியம், சிலப்பதிகார உரை எழுத அடியார்க்கு நல்லார்க்கு உதவியாயிருந்தது என்பதைத் தவிர அதைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 4. குலோத்துங்கன் இசைநூல் குலோத்துங்க சோழன், சோழ அரசர்களில் பேர்பெற்றவன். இவனுக்கு விசயதரன், செயங்கொண்டான் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. கலிங்கப் போரை வென்றவன் இவனே. அதனால், கலிங்கத்துப் பரணி என்னும் நூலைச் செயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப் பெற்றவன். இவன் இசைக் கலையில் வல்லவன் என்றும், இசைத்தமிழ் நூல் ஒன்றை இயற்றினான் என்றும் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. வாழி சோழகுல சேகரன் வகுத்த விசையின் மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா வேழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியான் யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. (கலிங்கத்துப் பரணி, அவதாரம், 54 ஆம் தாழிசை). தாள முஞ்செல வும்பிழை யாவகை தான்வ குத்தன தன்னெதிர் பாடியே காள முங்களி றும்பெறும் பாணர்தங் கல்வி யிற்பிழை கண்டனன் கேட்கவே. (மேற்படி, காளிக்குக் கூளி கூறியது. 13ஆம் தாழிசை) |