மறைந்துபோன தமிழ் நூல்கள் | 205 |
தலைச்சங்கத்தில் இருந்தவரும், தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்று கூறப்படுகிறவருமாகிய அகத்தியனார் செய்த அகத்தியம் என்னும் நூல் இடைச்சங்க காலத்திலேயே மறைந்துவிட்டது என்பர். அதாவது, தொல்காப்பியம் தோன்றிய பிறகு அகத்தியம் இறந்துவிட்டது. என்பர். பிற்காலத்தில், அகத்தியர் பெயரால் அகத்தியம் என்னும் நூலைப் புனைந்தெழுதி வழங்கிவந்தார்கள் என்று கருதுவதற்கு இக்காலத்து வழங்கும் ‘அகத்திய’ச் சூத்திரங்கள் இடந்தருகின்றன. உதாரணமாக இதைக் காட்டுவோம்: நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர். (பெயரியல், 16ஆம் சூத்திர உரை) கீழ்க்காணும் அகத்தியச் சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். “கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களங் கொல்லங் கூவிள மென்னும் எல்லையின் புறத்தவு மீழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரு மிடுநில வாட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரு முடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும் என்றார் அகத்தியனார்.” இதே அகத்தியச் சூத்திரத்தைச் சில வேறுபாடுகளுடன் தெய்வச் சிலையார் தமது தொல்காப்பிய உரையில் (சொல் எச்சம்., 4ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். அது: “கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கந் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபா விருபுறச் சையத் துடனுறையு புகூஉந் தமிழ்திரி நிலங்களும் |