320 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
“தோடுடைய செவியன்முதற் கல்லூ ரென்னும் தொடைமுடிவாப் பரசமயத் தொகைகண் மாயப் பாடினார் பதிகங்கள் பாவி லொன்றாம் பதினாறா யிரமுளதாம் பகரு மன்றே” என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. இந்தப் பதினாறா யிரத்தில் சிதல் தின்றது போக இப்போது கிடைத்துள்ளவை முந்நூற் றெண்பத்துநான்கு பதிகங்களே! சுந்தர மூர்த்திசுவாமிகள் 38,000 பதிகங்கள் பாடினார் என்பர். “பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி பிறங்குதிரு வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழி தோறும் ஈறாய் முப்பத் தெண்ணாயிர மதாக”ப் பாடினார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது, 38,000-த்தில் மண் தின்றவை போக இப்போது எஞ்சியுள்ளவை நூறு பதிகங்களே. எனவே, மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்கு அதிகமாகவே மறைந்துபோயின. நற்றிணை: இது எட்டுத் தொகையுள் ஒன்று கடவுள் வாழ்த்துச் செய்யுளை நீக்கி 400 செய்யுள்களையுடையது. இதில் 234ஆம் செய்யுள் முழுவதும் காணப்படவில்லை. அன்றியும், 385ஆம் செய்யுளின் பிற்பகுதி அடிகளும் காணப்படவில்லை. நீலகேசி: இந்நூலின் ஒன்பதாவது பகுதியாகிய வேதவாதச் சருக்கத்தில் எட்டுச் செய்யுள்களும் (22 முதல் 29 வரை) உரையும் காணப்பட வில்லை. பதிற்றுப்பத்து: இது எட்டுத்தொகையுள் ஒன்று. இதில், முதற் பத்தும் பத்தாம் பத்தும் காணப்படவில்லை. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளும், வேறு மூன்று செய்யுள்களும் உரைகளில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. இந்நான்கு செய்யுள்களும், சங்க இலக்கியம் என்னும் நூலில் (சைவ சித்தாந்த சமாஜப் பதிப்பு) சேர்க்கப்பட்டுள்ளன. இவை எந்தப் பத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. |