பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு113

இந்த முறையில் தமிழ் நாட்டிற்கு வந்த உயர்தர ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார்கள். அவர்கள் படிக்க வசன நூல்கள் இல்லை. அன்றியும் தமிழ் இலக்கண நூல்கள் சூத்திரமாக அமைக்கப்பட்டிருந்தன. வசன நடையில் இலக்கணம் இருந்தால் எளிதில் படித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, வசன நடையில் தமிழ் இலக்கணநூலை எழுதுவோருக்கு ஒரு தொகை பணம் பரிசளிப்பதாக விளம்பரம் செய்தார்கள். இதன் காரணமாக முதன் முதலில் வெளிவந்த தமிழ் வசன இலக்கண நூல் தமிழ் விளக்கம் என்பது, இந்தநூல் சக ஆண்டு 1732-இல் (கி.பி. 1811-இல்) திருவேற்காடு சுப்பராய முதலியார் என்பவரால் எழுதப்பட்டது. ஏறத்தாழ நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட இந்நூலின் ஒரு பழைய பிரதியை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். இந்நூலின் பிரதி இப்போது எங்கேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அந்த நூலின் முகப்புப் பக்கம் கீழ்க்கண்டவாறு அச்சிடப்பட்டிருந்தது.

A TAMEL EXPOSITOR
by Teroovorcaudoo
Subroya Mudaliar
Printed at Madras
A.D. 1811

தமிழுடைய வியலபைக
கேழவியு முத்தாமுமா யெழுதப்பட்ட
ஒரு
சுருக்கமான வயனம்
அடங்கிய

“தமிழ் விளக்கம்”

திருவேற்காடு சுப்பறாய முதலியாரால்
உண்டு பண்ணி யிங்கிலீசு பாழையில்
மொழிபெயர்க்கப் பட்டது
சென்னை பட்டணத்தில் அச்சுபோட்டது.
சகாப்தம் தஎளஙயஉளு