பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு163

இன்பகவி (?-1885)

திருநெல்வேலியில் மணப்பாறை என்னும் ஊரில் பிறந்தவர். கிறிஸ்துவர். எளிய நடையில் செய்யுள் செய்ய வல்லவர். பல தனிச் செய்யுட்கள் பாடியுள்ளார். யாழ்ப்பாணத்துக் கச்சேரி முதலியாராக இருந்த பிலிப்பு ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணர் என்பவர் மீது குறவஞ்சி நூல் ஒன்று இயற்றினார்.

ராட்லர் ஐயர் 1 (1749-1836)

பிரான்ஸ் தேசத்தில் பிறந்தவர். கிறிஸ்து சமயத் தொண்டு செய்வதற்காக 1776-இல் தரங்கம்பாடிக்கு வந்தார். பிறகு 1803-இல் சென்னைக்கு வந்து சமயத்தொண்டு செய்தார். தமிழ்-ஆங்கில அகராதியை எழுதிவெளியிட்டார்.

அநந்தபாரதி ஐயங்கார் (1786-1846)

தஞ்சாவூரில் உமையம்மாள்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். திருவள்ளூரில் சில காலம் உபாத்தியாயர் தொழில் செய்தார். பிறகு, தஞ்சை மாவட்டத்தில் சில கோவில்களில் கர்ணம் தொழிலும் பிறகு, சம்பிரதி உத்தியோகமும் செய்தார். கடைசியில் அவ் வேலைகளை விட்டுத் திருவிடை மருதூரில் நிலைத்து இருந்தார். அந்நாட்களில் அவ்வூர் சுவாமியின் பேரில் ஒரு நாடகம் இயற்றிய தாகவும், ஆலய தர்மகர்த்தராக இருந்த அய்யாத் தம்பிரான் என்பவர் இவருக்குக் ‘கவிராஜ சாமி’ என்னும் சிறப்புப் பெயர் கொடுத்து ஒரு வீட்டையும் தோட்டத்தையும் பரிசாகக் கொடுத்ததாகவும் கூறுவர்.

இவர் இயற்றிய நூல்கள்: உத்தர ராமாயணக் கீர்த்தணை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேலழகர் நொண்டிச் சிந்து, மருதூர் வெண்பா, பாப்பாத்திரட்டு, இடபவாகனக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, திருவிடை மருதூர் நொண்டி நாடகம், வேதாந்த தேசிகர் கீர்த்தனை.

குணங்குடி மஸ்தான் (1788-1835)

இவர் இராம நாதபுரத்துக் குணங்குடியில் பிறந்தவர், சுல்தான் அப்துல் காதிறு என்பது இவரது இயற்பெயர். துறவியான பிறகு குணங்குடி மஸ்தான் என்று பெயர் பெற்றார். இவர் சென்னை நகரத்தில் காலமானார். இவர் இயற்றியபாடல்களைத் தொகுத்துச் சீயமங்கலம்