பக்கம் எண் :

170மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

பகவத்கீதையை 1852-இலும், நாலடியாரை 1855-இலும் அச்சிட்டார். நைடதத்திற்கு உரை எழுதி 1859-இல் அச்சிட்டார். யாழ்ப்பாணத்து ‘உதயதாரகை’ப் பத்திரிகையில் இலக்கண இலக்கியங்களைப் பற்றி (1841 முதல் 1843 வரையில்) கட்டுரைகள் எழுதினார். பல இலக்கண இலக்கிய நூல்களிலிருந்து தொகுத்து இலக்கியக் களஞ்சியம், இலக்கணக் களஞ்சியம் என்னும் பெயருடன் அச்சிட்டார்.

மநுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், நீதி சிந்தாமணி, (இவை ஒவ்வொன்றும் நூறு செய்யுட்களைக் கொண்டது.) சன்மார்க்க சாரம் (110 செய்யுள்) என்னும் நூல்களை இயற்றி யாழ்ப்பாணத்திலிருந்த ஒரு நண்பருக்கு அனுப்பினார். ஆனால், அவை அச்சிடப்படவில்லை.

தெய்லர் ஐயர் 5 (1796-1878)

ஐரோப்பியர். 1815-ஆம் ஆண்டு சென்னைக்கு மதவூழியராக வந்தார். 1819-இல் இங்கிலாந்து சென்று மதகுருவுக்கான கல்வி பயின்று மீண்டும் சென்னைக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொண்ட பிறகு இவருக்குப் போதிய செல்வம் கிடைத்தபடியால், இலக்கிய ஆராய்ச்சி செய்வதில் அதிகமாகக் காலத்தைச் செலவிட்டார். தமிழில் சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். வேதாத்தாட்சி என்னும் நூலைஎழுதி 1834-இல் சென்னையில் அச்சிட்டார். ஐரோப்பியர் தமிழ் கற்பதற்காகச் சில பாடப்புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வெளியிட்டார். வெற்றிவேற்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கீழ்நாட்டுக் கையெழுத்துப் புத்தகச் சாலையில் இருந்த ஏட்டுச் சுவடிகளுக்கு விரிவான பட்டியலை எழுதி 1857-இல் வெளியிட்டார். தமிழிலிருந்த கீழ்நாட்டுச் சரித்திரக் கையெழுத்துச் சுவடியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அப்புக்குட்டி ஐயர் (1797-?)

யாழ்ப்பாணத்து நல்லூர் இவரூர். தமிழிலும் வடமொழியிலும் வல்லுநர். சூதுபுராணம், நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் என்னும் நூல்களை இயற்றினார்.

சரவணமுத்துப் புலவர் (1802-1845)

யாழ்ப்பாணத்து நல்லூர் இவர் ஊர். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் கல்வி பயின்றார். சென்னையில் இருந்த களத்தூர்