பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு243

வேங்கடசால நாயகர்

இவர் ஊர் அத்திப்பாக்கம். செங்கல்பட்டு மாவட்டம் பாயக்காரி ஏஜெண்டாக இருந்தார். இந்து முதாசார ஆபாச தரிசினி என்னும் நூலை விருத்தப்பாவினால் இயற்றினார். இந்நூல் 1882-ஆம் ஆண்டில் அஷ்டலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதிலிருந்து இரண்டு செய்யுட்களைக் காட்டுவோம்.

வஞ்சகர் மொழி யினாலே மாநிலத் துழல்வோ ரெல்லாம்
பஞ்சமுற் றழிதல் நோக்கிப் பரிதபித் திரங்கி நாளும்
நெஞ்சகங் குழைந்துவாழும் நீர்மையால் நெடுநூல் கற்றுப்
பஞ்சலட் சணமும் தேர்ந்த பாவலர் பொறுப்பர் மாதோ.

ஆகம புராண சாஸ்திர
    மவைகொண்டு அறைந்தே னல்லேன்
மாகங்கொள் வைய கத்தி
    னனுபவ மேற்கோள்கொண்டும்
தகாங்கொண் டனுச ரித்த
    தகைமையோர் சாட்சி கொண்டும்
மோகங்கொண் டுலகத் தார்க்கு
    மொழிந்திட லானேன் பின்பு.

வேலுச்சாமிப் பிள்ளை

புலியூர் வெண்பா முதலிய நூல்களை இயற்றிய தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளையின் பரம்பரையைச் சேர்ந்தவர் இவர். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களி டத்திலும், சென்னைக் கிருஸ்துவக் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர் சின்னசாமி பிள்ளை அவர்களிடத்திலும் கல்வி பயின்றார். இவர், தாம் எழுதிய புலியூர் வெண்பா உரைப்பாயிரத்தில் தம் ஆசிரியர்களுக்கு வணக்கங் கூறுவதிலிருந்து இதனை அறியலாம்:

சின்னைய மால்புரசைச் சின்னசா மிக்குரிசில்
என்னைய ராமிவரோ டெத்தலமும்-பொன்னெனமெச்
சுந்தரவா சானுந் துணையிலருண் மீனாட்சி
சுந்தரவா சானுந் துணை.