தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 261 |
“வனப்பியல் தானே வகுக்குங் காலை சின்மென் மொழியாற் றாய பனுவலொடு அம்மை தானே அடிநிமிர் பின்றே” என்னும் தொல். பொருள். செய்யுள்547-ஆம், சூத்திர உரையிலும் பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுகிறார். அவர் கூறுவது: “தாய பனுவலோடென்பது அறம் பொருள் இன்ப மென்னும் மூன்றற்கும் இலக்கணஞ்சொல்லுப; வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச் செல்வ தென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்த வாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்த வாறும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறுங் கார் நாற்பது, களவழி நாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க.” இவ்வாறு பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிக் கூறியுள்ளார். நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதரும் (387-ஆம் சூத்திர உரையில்) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகிறார். கீழ்க்கண்ட பழைய வெண்பா, கீழ்க்கணக்கு நூல்களின் பெயரைக் கூறுகின்றது. நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. இந்தப் பழைய வெண்பாவில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சில பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. சில பெயர்கள் துணிந்துகூற முடியாதவையாக இருந்தன. நாலடி, நான்மணி (க்கடிகை), முப்பால், (திரி)கடுகம், (ஆசாரக்)கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், (முதுமொழிக்)காஞ்சி, ஏலாதி என்னும் நூற்பெயர்கள் தெளிவாகத் தெரிகின்றன. நானாற்பது ஐந்திணை என்பன பற்றியும் இன்னிலை, கைந்நிலை என்பன பற்றியும் சென்ற நூற்றாண்டிலே பலருக்கும் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஏன்? முப்பால், கோவை என்னும் பெயரிலுங்கூட ஐயம் நிகழ்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. |