பக்கம் எண் :

32மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

மொழிகளின் உதவிப் பேராசிரியராக இருந்தவர் ராபர்ட் அண்டர்சன்3 என்பவர். இவர் சென்னை மாகாணத்தில் அரசாங்க உத்தியோகஸ் தராக இருந்து, உடல்நலம் குன்றிய காரணத்தால், 1819-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று அந்தக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். அவர் அந்தக் கல்லூரியில் தமிழ் பயின்ற ஆங்கில மாணவர் களுக்காகத் தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதி 1821-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த இலக்கண நூலுக்கு Rudiments of Tamil Grammar என்பது பெயர். அந்த இலக்கண நூல் வீரமா முனிவர் எழுதிய செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம் என்னும் நூல்களையும் எல்லிஸ் துரையவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பையும் துணையாகக்கொண்டு எழுதப்பட்டது.

அக்காலத்தில் ஆங்கிலேய உத்தியோகஸ்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது முதலிய மொழிகளைக் கற்றுப் பரீட்சையில் தேறிச் சம்பள உயர்வு பெற்றனர். சென்னைக் கல்விச் சங்கத்திலே ஆங்கிலேயே உத்தியோகஸ்தர் பலர் தமிழ்மொழி பயின்றார்கள். இந்தக் கல்விச் சங்கம் பரிட்சைகளை நடத்தியதோடு புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் அச்சிட்டது. 1854-ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் எடுபட்டபோது, இச்சங்கத்தின் முக்கிய பணியாகிய தேச பாஷைப் பரீட்சைகளை நடத்தும் பொறுப்பு Board of Examiners என்னும் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது.

சென்னைக் கல்விச் சங்கம் சில தமிழ் நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தியது. இச்சங்கம் அச்சிட்டு வெளியிட்ட தமிழ் நூல்களின் பெயர்களை, நான் அறிந்த வரையில், கீழே தருகிறேன்.

பஞ்ச தந்திரக் கதை: இதன் முகப்புப் பக்கத்தில் இவ்வாறு அச்சிடப்பட்டிருக்கிறது.

‘இஃது தமிழ்த் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியார் மொழி பெயர்த்த பஞ்சதந்திரக் கதை.’

“சாலீவாகன சக வருடம் 17474 -க்கு மேற் செல்லா நின்ற விய வருடத்திற்குச் சரியான கிரீஸ்து 18264-ஆம் வருடத்திற் சென்னைக் கல்விச் சங்கத் தச்சுட் பதித்தது.”

இந்நூலின் பாயிரம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது:-