பக்கம் எண் :

184மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இவனுடைய பாட்டன்மார், தந்தை, சிறிய தந்தை, தமயன் ஆகியோர் சேர இராச்சியதைப் பெரிதாக்கி வளர்த்ததை முன்னமே கூறினோம். மூத்த கால்வழியில் வந்தவன் ஆகையால் சேர இராச்சியத்தின் பேரரசனாகச் செங்குட்டுவன் இருந்தான். இவனுக்குக் கீழடங்கி இவனுடைய தம்பி யாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இளஞ்சேரல் இரும்பொறை யும் சேர நாட்டுப் பகுதிகளையரசாண்டனர்.

செங்குட்டுவனுக்கு ஆட்சித்துணையாக ஐம்பெருங் குழு இருந்தது. ஐம்பெருங் குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனாதி பதியர், தூதுவர், சாரணர் என்பவர். செங்குட்டு வனுடைய தலைமை அமைச்சன் பெயர் வில்லவன் கோதை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற்கு உரைக்கும்

(சிலம்பு - காட்சி: 150-151)

(`பல்யாண்டு வாழ்க என்று இனிச் சொல்லுகின்றான், வில்லவன் கோதை யென்னும் மந்திரி’ என்பது அரும்பதவுரை.) இந்த வில்லவன் கோதை, செங்குட்டுவன் பத்தினிக்குக் கல் எடுக்க வட நாடு சென்றபோது அவனுடன் சென்றான்.

வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைப்பல ஏவி

(சிலம்பு - கல்கோள்: 251-252)

கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழா செய்த பிறகு செங்குட்டுவன், விழாவுக்கு வந்திருந்த அரசர்களுக்கு ஏற்றபடி வகைகளைச் செய்து கொடுக்கும்படி அமைச்சனாகிய வில்லவன் கோதையை ஏவினான் என்று சிலம்பு சொல்லுகிறது.

மன்னவர்க் கேற்பன செய்க நீயென
வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி

(சிலம்பு - நடுக்கல்: 201-202)

சிலப்பதிகாரம் செங்குட்டுவனுடைய புரோகிதனைக் கூறுகிறது. ஆனால், அவன் பெயரைக் கூறவில்லை. அவனை ஆசான் என்று கூறுகிறது. ஆசான் என்பதற்குப் புரோகிதன் என்று அரும்பத