64 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
வரைத்திடும் இலக்க மாற வளைதிரைக் குட்சிறிது கல்லணி வகுக்கின்ற வன்கணக் கினிது பகர மருவுசொக் கட்டானும் விளையாட மறைவாக வைத்துசது ரங்க மாடக் கூறாக வெட்டெழுத் தாணியெழு தும்படிக் குங்கவிதை பகர வதிலோர் கூரெழுத் தாணிசது ரங்கமுது குப்புறம் குதிரையடி வெண்பா வரக் கூறுபுல வோர்சபையில் அட்டாவதான முல கோர்புகழ வேநடத்த.” என்று விளக்குகிறார். சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே சில அவதானிகள் இருந்தனர். அஷ்டாவதானம் சபாபதி முதலியார், அஷ்டாவதானம் நாகலிங்கம் பிள்ளை, அஷ்டாவதானம் பெருமாட் கவிராயர், அஷ்டாவதானி வைரக்கண் வேலாயுதப் புலவர், அஷ்டாவதானம் இராமசாமிப் பிள்ளை. சோடசாவதானம் சுப்பராய செட்டியார், சோடசாவதானி முத்தழகய்யங்கார், சதாவதானம் இராமசாமிச் செட்டியார், சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் முதலியவர்கள் சென்ற நூற்றாண்டில் இருந்த அவதானிகள் ஆவர். அடிக்குறிப்புகள் 1. அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்பவர் சிறந்த புலவர். இவர் பிறவி குருடர். பார்வை இல்லாத இவர் எழுத்தைக் கற்றது வியப்புள்ளது. இவருடைய முதுகில், எழுத்தின் வரிவடித்தை ஒருவர் விரலினால் எழுதிக்காட்டி அவருக்கு எழுத்தின் வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் கற்பித்தாராம்! இவ்வாறு எழுத்துக்களைக் கற்ற இவர் பிற்காலத்தில் சிறந்த புலவராக விளங்கிப் பல நூல்களை இயற்றினார். |