பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில்
நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்;
மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்;
 110வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்
ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ
நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்;
நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும்
படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித்
 115தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா,
நிலவொளி முத்துங் கவடியும் பணமா,
அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண
துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ்
செங்கட் போத்துங் கம்புட் கோழியுங்
 120கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும்
பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்
என்றிவை பலவும் எண்ணில குழீஇச்
சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்,
அந்தியங் காடியின் சந்தங் காட்டித்
 125தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்
பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்;
வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி


எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து - ஓசை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த் திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் - பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி - மாலைச் சந்தை. வீறு - ஆற்றல்.