பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்167

இரண்டாம் களம்

இடம் : ஊர்ப்புறம் ஒருசார்.

காலம் : எற்பாடு.

நடன்: நடராஜன்.

(நேரிசை ஆசிரியப்பா)

நடராஜன்: (தனிமொழி)  காலையிற் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய்
இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக்
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம்
 5பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம்
என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி.
அதனால் அன்றோ இதுபோல் விரைவில்
இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது?
எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை


கடிநகர் - காவல் உடைய நகரம். வேலை - சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி - கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.)

அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து.

இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை - தொழில். இவ்வயின் - இவ்விடத்தில்.