பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 21 |
தமிழ், சரித்திரம், தத்துவ சாஸ்திரம் முதலிய பாடங்களின் பரிசோத கராக இருந்தார். தென் இந்திய சரித்திர சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதனால் இவரைப் பாராட்டி அரசாங்கத்தார் இவருக்கு “ராய்பகதூர்” என்னும் சிறப்புப் பட்டம் வழங்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த பிள்ளை யவர்கள், அக்காலத்தில் இருந்த புலவர்களுடன் நட்புரிமையும் தொடர்பும் கொண்டிருந்தார். நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வைத்திருந்தவரும் பெரும்புலவருமான இயற்றமிழாசிரியர் நாராயண சாமிப் பிள்ளை அவர்களிடத்திலும் பிள்ளையவர்கள் தமிழ் நூல்களைப் பாடங் கேட்டதாகக் கூறுவர். மகா வித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்கள், உ.வே. சாமிநாதையர் அவர்கள், பூண்டி அரங்கநாத முதலியார் அவர்கள், சுவாமி வேதாசலம் (மறைமலை யடிகள்) அவர்கள் முதலியவர்களுடன் நட்புக்கொண்டிருந்தார். ராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், முகவை இராமாநுஜ கவிராயர், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், சரவணப் பெருமாளையர், உ. வே. சாமிநாதையர் முதலிய அறிஞர்கள் அக்காலத்தில்தான் (19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்), படிப்பாரற்று மூலையில் முடங்கிக் கிடந்த ஏட்டுச் சுவடிகளை அச்சுப் புத்தகங்களாக அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தினார்கள். பிள்ளையவர்கள் காலத்திலே பழைய தமிழ் நூல்களும் புதிய தமிழ் நூல்களும் அச்சுப் புத்தகங்களாக வெளிப்பட்டன. இதைத்தான் பிள்ளையவர்கள் தமது மனோன்மணீய நூலில் தமிழ்த் தெய்வ வணக்கத்தில், “நிற்புகழ்ந் தேத்தும்நின் நெடுந்தகை மைந்தர் பற்பலர் நிற்பெரும் பழம்பணி புதுக்கியும் பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்” தொண்டு புரிந்ததாகக் கூறினார். பிள்ளையவர்கள் தமிழ்த் தாய்க்குப் புதிய தொண்டு செய்ய எண்ணினார். தமிழில் நாடக நூல்கள் இல்லாத குறையை யுணர்ந்து மனோன்மணீயம் என்னும் சிறந்த நாடக நூலை இயற்றினார். இவர் இயற்றிய ஏனைய நூல்களைவிட மனோன்மணீயமே இவருக்குப் பெரும் புகழைத் தந்துள்ளது. இவரை “மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை” என்று வழங்குவது வழக்கம். மனோன்மணீயத்தை இயற்றுவதற்கு முன்னமே “சிவகாமி சரிதம்” என்னும் சிறு செய்யுள் |