226 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
குடிலன் கூறுகிறான்: “சுவாமி பொறுத்தருளும். பிழை என்னுடையது. தங்கள் திருவுளக் கருத்துப்படி பலதேவனைப் படைத் தலைவ னாக்கினேன். அது என் பிழைதான். அதனால் இவனை இவ்விதம் செய்தான். அதுமட்டுமா ! போர்க்களம் எல்லாம் சுழன்று திரிந்து குழப்பம் செய்துவிட்டான். காலாட்படை, குதிரைப்படை, யானைப் படை, தேர்ப்படை எல்லாவற்றையும் கலைத்து நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை அழித்துவிட்டான்!” அரசன், “ஆமாம் ; நாமும் கண்டோம்” என்று கூறி, இன்னொரு சேவகனைப் பார்த்து, “கொண்டுவா அவனை, விரைவில்” என்று கூற, சேவகன் ஓடினான். அப்போது குடிலன், அரசனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்துகிறதுபோலக் கூறினான்: “போனது போகட்டும் அரசே! நாளை போரில் வெல்லுவோம். தாங்கள் ஒன்று கேட்டால் அவன் ஒன்று உளறுவான். இனி கேட்டு என்ன பயன்?” அரசன், “எதைப் பொறுத்தாலும் இதைப் பொறுக்க மாட்டேன். எவ்வளவு சூது! எவ்வளவு கொடுமை!” என்று கூறும்போது, நாராயணன் உள்ளே வர, அவனை நோக்கி, “போருக்குப் போகும்முன் நாம் உனக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டான். “அப்போது, அரசர்பெருமான் கட்டளை ஒன்றும் இல்லை. கோட்டையைக் காக்கும்படி குடிலர் கூறினார்” என்றான் நாராயணன். “குடிலர் என்றால் என்ன, நாம் என்றால் என்ன? இருவரும் ஒருவர்தானே! கோட்டையைக் காத்தனையோ?” “நன்றாகக் காத்தேன்” என்றான் நாராயணன். “அப்படியானால் பகைவர் அகழியை ஒரு பக்கம் எப்படித் தூர்த்தனர்?” “பகைவர் அகழியைத் தூர்க்கவில்லை. நமது படையின் பிணம் தூர்த்தது” என்றான் நாராயணன். “போர்க்களத்தில் உன்னைக் கண்டோம். அங்கேயா உன்னு டைய கோட்டைக் காவல்?” “அரசர்பெருமானைக் காக்க அங்கு வந்தேன்.” அரசன், பலதேவனுடைய காயத்தைக் காட்டி, “உன்கபட நாடகம் நன்றாக இருக்கிறது ! அவன் நெஞ்சில் புண் பார்த்தாயா? அது எப்படி வந்தது !” |