யா முதல் - யாமளபுராதனர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
யா ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஆ) ; யாவை ; ஓர் அசைச்சொல் ; ஒரு மரவகை ; அகலம் .
யாக்கை கட்டுகை ; உடம்பு .
யாக்கைக்குற்றம் கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் .
யாக்கைக்குறுகுற்றம் கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் .
யாககுண்டம் வேள்விக்குழி .
யாகசாலை வேள்விச்சாலை ; கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் .
யாகத்திரவியம் வேள்விப்பொருள் .
யாகநிலை வேள்விச்சாலை .
யாகப்பிறையான் தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் .
யாகபத்தினி வேள்விசெய்பவன் மனைவி ; திரௌபதி .
யாகபதி வேள்விசெய்யும் தலைவன் ; இந்திரன் .
யாகபன்னி யாகபதியின் மனைவி .
யாகபேரம் கோயிலுள் வேள்விச்சாலைக்குரிய மூர்த்தி .
யாகபோசனர் வானோர் .
யாகம் வேள்வி ; பதினெண்வகை வேள்வி .
யாகமண்டபம் காண்க : யாகசாலை .
யாகவிபாகம் வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் .
யாங்கண் காண்க : யாண்டை .
யாங்கணும் எங்கும் .
யாங்கர் அரக்கர் .
யாங்கனம் எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .
யாங்கு எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .
யாங்ஙனம் எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .
யாசகம் இரப்பு ; மதயானை ; பட்டத்தியானை .
யாசகன் இரவலன் ; வேள்வி இயற்றுபவன் .
யாசித்தல் இரத்தல் .
யாசிதம் இரப்புத்தொழில் , வட்டி அல்லது வாடகையின்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள் .
யாடம் காண்க : சிறுகாஞ்சொறி .
யாடு ஆடு .
யாண்டு எங்கு ; எப்பொழுது ; ஆண்டு .
யாண்டும் எப்போதும் ; எவ்விடத்தும் .
யாண்டை எவ்விடம் .
யாணர் புதிதுபடல் ; புதிய வருவாய் ; வளமை ; செல்வம் ; நன்மை ; முறைமை ; அழகு ; தச்சர் .
யாணன் அழகுள்ளவன் .
யாணு அழகு .
யாத்தல் செய்யுளமைத்தல் ; கட்டுதல் ; பிணித்தல் ; நீர் முதலியன அணைத்தல் ; விட்டு நீங்காதிருத்தல் ; சொல்லுதல் .
யாத்தார் உற்ற நண்பர் .
யாத்திரிகர்விடுதி பயணஞ்செய்வோர் தங்குமிடம் .
யாத்திரிகன் புண்ணிய இடங்கட்குப் பயணம் செய்வோன் .
யாத்திரை பயணம் ; படையெழுச்சி ; காலட்சேபம் ; வழக்கம் ; திருவிழா ; கூத்து .
யாத்து தைப்பு .
யாதபதி கடல் ; வருணன் .
யாதம் யானைத்தோட்டி ; காண்க : யாதவம் .
யாதவம் மாட்டுமந்தை .
யாதவர் யதுகுலத்தவர் ; இடையர் .
யாதவன் கண்ணபிரான் ; இடையன் .
யாதவி குந்தி ; உமை ; யதுகுலத்தவள் .
யாதனம் தெப்பம் ; மரக்கலம் ; வேதனை ; துயரம் .
யாதனாசரீரம் நரகம் நுகர்தற்குரிய உடம்பு .
யாதனை வேதனை ; நரகவேதனை ; துன்பம் .
யாதிகன் வழிச்செல்வோன் .
யாது எது ; இராக்கதன் ; பிசாசு ; கள் ; நினைவு .
யாதுதானன் இராக்கதன் .
யாதும் எதுவும் .
யாப்பண்டம் கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் .
யாப்பதிகாரம் செய்யுளிலக்கணங் கூறும் நூற்பகுதி .
யாப்பறை கற்பில்லாதவள் .
யாப்பியம் பொழுதுபோக்கு ; காலவரையறையுள்ளது ; புல்லியது ; நோய்வகை .
யாப்பு கட்டுகை ; கட்டு ; செய்யுள் ; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு ; சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு ; அன்பு ; உறுதி ; சூழ்ச்சி ; பொருத்தம் ; பாம்பு .
யாப்புறவு தள்ளத்தகாத நியதி ; தகுதி .
யாப்புறுத்தல் வலியுறுத்தல் .
யாப்புறுதல் பொருள் நிரம்பியிருத்தல் ; ஏற்புடையதாதல் ; ஈட்டுதல் .
யாபனம் பொழுதுபோக்குதல் ; இகழுதல் ; தாமதிக்கை .
யாபித்தல் பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் .
யாம் தன்மைப் பன்மைப் பெயர் .
யாமக்கோட்டம் அந்தப்புரம் .
யாமகோடம் சேவல் ; நாழிகைவட்டில் .
யாமங்கொள்பவர் ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் .
யாமசரிதன் இரவில் திரிபவனான அரக்கன் .
யாமபதி சந்திரன் .
யாமபேரி இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை .
யாமம் நள்ளிரவு ; சாமம் ; இரவு ; இடக்கை மேளம் ; மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை ; அகலம் ; தெற்கு .
யாமயாழ் நள்ளிரவில் மீட்டும் யாழ் .
யாமவதி இரவு .
யாமளபுராதனர் காளியின் படைவீரர் .