மகாலிங்கசுவாமி கோவில் - திருவிடை மருதூர்

சோழநாட்டு (தென்கரை)த் தலம்

  1. மயிலாடுதுறை - கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம்.
  2. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்துச் சாலையில் உள்ள தலம்.

‘இடைமருது’ - ‘மத்தியார்ச்சுனம்’ எனப் புகழப்படும் பதி. வடக்கே ஆந்திரத்தில் உள்ள ஸ்ரீ சைலம் (மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும்; தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள ‘திருப்புடைமருதூர்’ (புடார்ச்சுனம்) கடைமருது என்றும் வழங்கப்படும். இவையிரண்டுக்கும் இடையில் இருப்பதால் இஃது இடைமருது ஆயிற்று. (அர்ச்சுனம் - மருதமரம்)

மருதவனம், சண்பகாரண்யம், சத்திபுரம் என்பன வேறு பெயர்கள். வரகுண பாண்டியனுக்குப் பிரமகத்தி நீங்கிய தலம். (கிழக்குக் கோபுர வாயிலில் பிரமகத்தி உள்ளது.)

மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் இத்தலத்தைச் சுற்றிப் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. அவை :-

  1. விநாயகர் - திருவலஞ்சுழி
  2. முருகன் - சுவாமிமலை
  3. நடராசர் - தில்லை
  4. நவக்கிரகம் - சூரியனார் கோயில்
  5. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
  6. பைரவர் - சீர்காழி
  7. நந்தி - திருவாவடுதுறை
  8. சோமாஸ்கந்தர் - திருவாரூர்
  9. சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.

திருவாவடுதுறை ஆதீனக்கோயில். ‘திருவிடைமருதூர் தெரு அழகு’ என்பது முதுமொழி.

இறைவன் - மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர்.
இறைவி - பிருகத்சுந்தரகுஜாம்பிகை, பெருநலமுலையம்மை
தலமரம் - மருது (அர்ஜு னம்)
தீர்த்தம் - காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்
தலவிநாயகர் - ஆண்டவிநாயகர் (முதற் பிராகாரத்தில் சுவாமிக்குத் தெற்கிலுள்ளார்.)

மூவர் பாடல் பெற்ற தலம். கருவூர்த்தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் பாடல்களிலும் இப்பதி புகழ்ந்து பாடப்படுகிறது.

பெரிய கோயில். நான்கு பிராகாரங்கள். வீதியையும் சேர்த்தால் பிராகாரம் ஐந்தாகும். வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம் “அஸ்வமேத பிராகாரம்” எனப்படும். இதன் மூலம் சுவாமி அம்பாள் கோயிலை வலம் வரலாம். இப்பிராகாரத்தை வலம் வந்தால் பேய், பைத்தியம் முதலியன நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதைப் பார்க்கலாம். அடுத்துள்ள பிராகாரம் “கொடுமுடிப் பிராகாரம்” - இதன் மூலம் சுவாமியை மட்டும் வலம் வரலாம். அடுத்து பிரணவப் பிராகாரத்தினால் சுவாமியை வலம் வரலாம். இப்பிராகாரத்தில் தலமரம் உள்ளது. அம்பாள் கோயில் உள்ளது உள் பிராகாரம். (இதனுள்ளும் ஒரு பிராகாரமுள்ளது.)

தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க; இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத் தலம்” என்றும் சொல்வர். வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும் ; மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர். சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.

சுவாமி அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியன. கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன. உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியர், கபிலர், அகத்தியர், வரகுண பாண்டியன் முதலியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். மருதமரத்தின் கீழே கட்டுண்ட கண்ணனின் உருவம் உள்ளது. பக்கத்தில் காவிரி ஓடுகிறது.

மூலவர் மகாலிங்கேஸ்வரர் - அழகான மூர்த்தி. நிறைவான தரிசனம். அம்பாள் அழகிய கோலத்துடன் தரிசனம். அம்பிகை மௌனமாக இருந்து தவஞ்செய்த மூகாம்பிகை சந்நிதியும், மேரு பிரதிஷ்டையும் தரிசிக்கத் தக்கவை. கோயில் நன்கு பராமரிக்கப்பட்டுப் பொலிவுடன் திகழ்கிறது. தைப்பூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத்துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்திற்குக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ள தலபுராணமும் ; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடியுள்ள ‘உலா’வும் உள்ளன. (தலபுராணம் - மருதவனப்புராணம்) இத்திருக்கோயிலில் ஆதித்தபிச்சன் என்பவனால் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் ‘பிச்சைக் கட்டளை’ என்றழைக்கப்படுகின்றன. இக்கட்டளை தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் இருந்து வருகின்றது. இக்கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள. இவற்றுள் ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவர மண்குடங்களே பயன்படுத்தப்பட்டன என்னும் செய்தியை அறிகிறோம். கல்வெட்டில் இத்தலம் ‘உய்யக்கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர்’ என்று குறிக்கப் பெறுகின்றது.

“பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதனீர்
எங்கும் எழிலார் மறையோர்கண் முறையாலேத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.”    (சம்பந்தர்)

“சூலப்படையார்தாமே போலுஞ்
சுடர்த்திங்கள் கண்ணியுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமும் தந்திரமும் ஆனார்போலும்
வேலைக் கடல்நஞ்சை யுண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக்கமழ் குழலாள் பாகர் போலும்
இடைமருதுமேவிய ஈசனாரே.”                        (அப்பர்)

“முந்திச்செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவுமாட்டேன்
சிறுச்சிறிதே யிரப்பார்கட் கொன்றீயேன்
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தைநீ எனக்கு உய்வகை அருளாய்
இடைமருதுறை எந்தை பிரானே.”                  (சுந்தரர்)

எந்தையெந்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ.  (திருவாசகம்)
                                         - யோகையுளந்

தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
திருவிடைமருதூர் & அஞ்சல் - 612 104
திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.