ஐயாறப்பர் கோவில் - திருவையாறு

திருமழபாடியில் நந்திக்குத் திருமணம் செய்து வைத்தார். இதனுடைய அங்கமாகத்தான் சப்தஸ்தானத் திருவிழா - ஏழூர் திருவிழா சித்திரையில் நடைபெறுகிறது.

நந்தியெம்பெருமானுக்குத் திருமழபாடியில் நடைபெற்ற திருமண விழாவின் ஊர்வலமாகச் சப்தஸ்தான விழா இவ்வேழு தலங்களிலும் நிகழ்கிறது. ஐயறப்பர் நந்தியெம்பெருமானுடன் சித்திரை மாதம் முழுமதி நாளுக்கடுத்த விசாகத்தில் புறப்பட்டு ஏழூர்களுக்குச் செல்வர். ஏழூர் இறைவரும் ஐயாறப்பரை எதிர்கொண்டழைத்துத் தாமும் திருவுலாவிற்கு எழுந்தருளுவர். ஏழூர் இறைவரும் உலா வரும் இவ்வினிய விழா தமிழகத் திருக்கோயில் விழாக்களில் புகழ் பெற்றதாகும்.

அம்பாள் ஆலயம் தர்மசம்வர்த்தினியின் திருச்சந்நிதி. தனிக் கோயிலாகப் பக்கத்தில் உள்ளது. கிழக்கு நோக்கியது. கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கருவறை, சிற்ப அழகு வாய்ந்தது - இழைக்கப் பட்ட கருங்கல்லால் ஆனது. வலம்வர வசதியுள்ளது. சூரியன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரி சந்நிதிகள் உள்ளது.

அம்பாள் நின்ற கோலம். அபயகரமும் தொடையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல மற்றொரு கரமும் உள்ள அமைப்பு. நான்கு திருக்கரங்கள் நல்ல பொலிவு.

அறம் வளர்த்த நாயகி, தரிசிக்கும் நம் உள்ளத்தில் ஆனந்தத்தையும் வளர்த்து அமைதியையும் அருளுகின்றாள். மாதந்தோறும் சித்திரைச் சதய நாளில் தென்கயிலைக் கோயிலிலும் சித்தரை ஆதிரையில் வடகயிலையீச்சரம் உலகமாதேவீச்சரம் கோயிலிலும் சிறப்பு ஆராதனை நடைபெறுகின்றது.

திருக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேரேவுள்ள வீதியின் கோடியில் காவிரியில் இறங்கி நீராட நல்ல படித்துறைகளுடன் கூடிய நீராடு கட்டடம் உள்ளது. ஆளுநாயகன் கயிலையில் இருக்கையைக் காணுமது காதலித்த அப்பர், ‘பழுதில் சீர் திருவையாற்றில் காண்’ என இறைவன் பணிக்க. வடகோடியில் தீர்த்தத்தில் மூழ்கித் திருவையாற்றில் வந்து எழுந்த அத்திருக்குளம் - அப்பர் குளம் - தற்போது மக்கள் வழக்கில் ‘உப்பங்குளம்’ என்று மருவி, கோயிலின் மேலக்கோபுர வாயில் வழியே சென்று வலப்பக்கம் திரும்பிச் சென்றால் வீதியின் கோடியில் உள்ளது. நல்லபடித் துறைகள் உள்ளன.

குளத்தின் எதிரில் ‘அபீஷ்ட வரத மகாகணபதி’ கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாகணபதி சந்நிதியும், பக்கத்தில் விசுவநாதர் விசாலாட்சி சந்நிதியும், துர்க்கை சந்நிதியும் உள்ளன. அப்பர்பெருமானின் சந்நிதியும் உள்ளது. இதற்கு எதிரில், சுவற்றில், குளத்திலிருந்து அப்பர் எழுவது போலவும் எதிரே இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தருவது போலவும் சித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஐயாறு செல்லும் அன்பர்கள், அவசியம் இத்திருக்குளத்தையும் கண்டு வர வேண்டும்.

முன் பின்