பக்தவத்சலேஸ்வரர் கோவில் - திருக்கழுக்குன்றம்

தொண்டை நாட்டுத் தலம்.

செங்கற்பட்டில் இருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 14 கி.மீ. தொலைவு. செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கான பேருந்துகளும் இத்தலத்தின் வழியே செல்கின்றன.

வேதமே, மலையாய் இருத்தலின் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது. ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப் படுகின்றன. மலை 500 அடி உயரமுள்ளது. மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் -வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி - சொக்கநாயகி. சுனை ஒன்றும் உள்ளது.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். வடநாட்டிலிருந்து வரும் யாத்ரிகர்களுக்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று சொன்னால்தான் புரியும். மலைமீது ஏறிச்செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது.

இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது. வலம் வருவதற்கேற்ப நல்ல பாதையுள்ளது. விளக்கு வசதிகள் உள்ளன. இதைச் சேர்ந்த கிராமங்கள் சுற்றிலும் உள்ளன. அன்னக்காவடி விநாயகர், சனிபகவான் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.

மூவர் பாடலும் பெற்ற தலம். மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம். அப்பெருமான் வாக்கிலும் -திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.

இத்தலத்திற்கு அந்தகக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. ஊருக்குள் உள்ள கோயில் ‘தாழக்கோயில்’ என்றழைக்கப் படுகின்றது. கோயிலின் சந்நிதி வீதியில் திருவாவடுதுறை ஆதீனக்கிளை மடம் ஒன்றுள்ளது.

இறைவன்

-

பக்தவத்சலேஸ்வரர்

இறைவி - திரிபுரசுந்தரி.
தலமரம் - வாழை.
தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு     பிறக்கின்றது.     இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்கு தீர்த்தம் - பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் ‘ருத்ரகோடி’ என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது. குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோயில் விமானம் தெரிகின்றது. மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன் - ருத்ரகோடீஸ்வரர், இறைவி - அபிராமசுந்தரி. இவ்விடத்தைத் தற்போது மக்கள் ‘ருத்ராங்கோயில்’ என்றழைக்கின்றனர்.

தாழக்கோயில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது. உச்சியில் நவ     கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர். கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை. கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது. இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன. இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை

வடக்கு வாயிலை அடுத்து வரும்போது ‘நந்தி தீர்த்தம்’ உள்ளது. கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில், (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இதன் கலையழகு கண்டுணரத்தக்கது.

நான்கு கால் மண்டபம். ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர். இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம். இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது. நுழையும்போது, வாயிலில் இடப்பால் ‘அநுக்கிரக நந்திகேஸ்வரர்’ தேவியுடன் காட்சி தருகின்றார். உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

பின்