சிவன்கோவில் - திருவெண்காடு

மூலஅகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி
தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிட்டவில்லை.
திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலைசாய்த்து விழும்
அமைப்பும் மறுபுறம் நந்தியும் உள்ளது காணத்தக்கது.

இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெருவிழாவில் ஐந்தாம் நாள்
அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது.
இப்புறப்பாட்டின் போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது)
இம்மூர்த்திக்குச் செய்யப்படும் சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள்
பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது
அடிக்கொரு பட்டு சார்த்தும் சிறப்பு முதலியனவாக எண்ணற்ற
சிறப்புக்கள்.

நடராசசபை தில்லையைப்போலச் செப்பறையில் அமைந்துள்ளது.
உள்ளே உள்ள ஸ்படிகலிங்கத்திற்குத் தில்லையைப்போல் நாடொறும்
பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரஹஸ்யமும் உள்ளது. பைரவரை யடுத்து,
காசி துண்டீர விநாயகர், அஷ்டபுஜதுர்க்கைச் சந்நிதிகள் உள்ளன.
துர்க்கை     மேற்கு     நோக்கியிருப்பது     இங்கு விசேஷமானது.
திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது
மரபாக இருந்து வருகின்றது.

வலம் முடித்துப்படிகளேறி முன் மண்டபம் அடைந்தால் நேரே
மூலவர் காட்சி தருகிறார். உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத்
திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

மூலவர் சந்நிதி - சற்றுயர்ந்த பாணம். அழகான திருமேனி.
வழிபடுவோர்க்கு வளமும் அமைதியும் நல்கும் சந்நிதானம். உட்புறச்
சுவரில் தலப்பதிகக் கல்வெட்டுகள் உள்ளன. சைவ எல்லப்ப
நாவலர் இவ்வூர்க்குத் தலபுராணம் பாடியுள்ளார். மாசிமகத்தில்
பெருவிழா    நடைபெறுகிறது. நாடொறும் ஆறுகால வழிபாடுகள்
சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாகமத்தின் படியும் அகோர மூர்த்திக்கு
காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு
மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன.

“நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கண்மேல்
ஏதம் தீரஇருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியால் கிளிசொற் பயிலும் வெண்காடே.”
                 (சம்பந்தர்)

“தூண்டுசுடர் மேனித்தூநீறாடிச்
    சூலம் கையேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டுபொறியர வங்காதிற்பெய்து
    பொற்சடைகள் அவைதாழப் புரிவெண்ணூலர்
நீண்டு கிடத்திலங்கு திங்கள்சூடி
    நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங்கொண்டார்
வேண்டு நடை நடக்கும் வெள்ளேறேறி
    வெண்காடுமேவிய விகிர்தனாரே.”
                (அப்பர்)

“காதலாலே கருதுதொண்டர் காரணத்தீராகி நின்றே
    பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனியேத்த ஆடவல்லீர்
நீதியாக ஏழிலோசை நித்தராகிச் சித்தர்சூழ
    வேதமோதித் திரிவதென்னே வேலைசூழ் வெண்காடனீரே.”
                (சுந்தரர்)
                அகோர மூர்த்தி துதி

“கருநிறமும் மணிமாலை புனையழகும்
    வளையெயிறும் கவினைச் செய்ய
எரிசிகையும் நுதல்விழியும் நடைக்கோல
    இணையடியும் இலகஎட்டுக்
கரநிலவ மணிபலகை வெண்டலை வாள்
    கடிதுடியோர் சூலம்ஏற்று
வெருவ மருத்துவனையடர் அகோரசிவன்
    துணைப்பதச்சீர் விளம்புவோமே.”
         (சைவ எல்லப்ப நாவலர் - தலபுராணம்)

            (சலந்தரன் மகன் - மருத்துவன்)
             -நல்லவர்கள்

கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே.
                (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்
திருவெண்காடு & அஞ்சல் - சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 609 114.


முன்