தியாகேசர் கோவில் - திருவாரூர்

இம்மண்டபத்தின் வலப்பால் விநாயகர், இடப்பால் துர்க்கை, அடுத்து
ஜ்வரஹரேஸ்வரர், ஏகாதசருத்ரர் வழிபட்ட சிவலிங்கங்களை வழிபட்டுச்
சென்று, அபிஷேகக் கட்டளை அறை, வாகன அறை, ராஜன் கட்டளை
அறை இவைகளைக் கடந்து முசுகுந்தரைத் தொழுது, இந்திரலிங்கம்
வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும்
ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப் பின்பு ஆரூர் அரநெறியை
அடையவேண்டும்.

ஆரூர் அரநெறி: இஃது ஒரு தனிக்கோயில். அப்பர் பாடல் பெற்றது.

இறைவன் -

அகிலேஸ்வரர்.

இறைவி - வண்டார் குழலி, புவனேஸ்வரி.

நமிநந்தியடிகள் வழிபட்டது. இக்கோயில் அசலேச்சரம் என்று
வழங்கப்படுகிறது. இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது.
இப்பெருமானின் - அசலேசுவரரின் நிழல் கிழக்குத் திசையிலன்றி மற்றத்
திசையில் விழுவதில்லை என்ற செய்தி தனி மகிமை வாய்ந்தது.

இதை வழிபட்டு, தக்ஷேசவரர், மனுச்சக்ரேஸ்வரர், பகீரதேசுவரர்,
கைலாசத்தியாகர், பாண்டியநாதர், சப்தமாதர், சப்தரிஷீசுவரர், சேரநாதர்
ஆகிய சந்நிதிகளை வழிபட்டு, ஆடகேசுவரத்தை அடையலாம்.

ஆடகேசுவரம் - அப்புத்தலம். இங்கொரு நாகபிலமுள்ளது. வழிபட்டு
வலமாக வரும்போது தலமரம் - பாதிரி உள்ளது. வணங்கி,
விசுவாமித்திரேசுவரர், புரூர்வசக்கரேசுவரர், மகாபலீசுவரர், ரௌத்திர
துர்க்கை, அருணாசலேசுவரர், வருணேசுரவிநாயகர், வருணேசுரர் முதலிய
மூர்த்தங்களைத் தொழுதவாறே ஆனந்தேஸ்வரத்தையடையலாம். மங்கண
முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம். அடுத்துள்ள
கோயில் விசுவகர்மேசம் - கருங்கற் கோயில். அழகான கொடுங்கைகள்,
சிற்பக்கலை வாய்ந்த தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பிரம்மா
முதலிய உருவங்கள் உள.

வணங்கி,     வழியிலுள்ள     மூர்த்தங்களைத்     தொழுதவாறே
சித்தீஸ்வரத்தை யடையலாம். மேற்கு நோக்கிய சந்நிதி. அடுத்துள்ளது
தான் தட்சிணாமூர்த்தி சந்நிதானம். இங்குத்தான் தருமபுர ஆதீன
ஆதிகுரு ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள் கமலை ஞானப்பிரகாசரைத்
தம் குருவாக ஏற்றுக்கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்கமூர்த்தி
பூசையினை ஏற்றுக்கொண்டார்கள். வழியிலுள்ள ஏராளமான சந்நிதிகளை
வணங்கி, தட்டச்சுற்றி மண்டபம் அடைந்து வல்லபை விநாயகரைத்
தொழுது துவஜஸ்தம்பத்தை யடையலாம். கொடிமரத்து விநாயகர் இங்கு
“பொற்கம்ப விநாயகர்” என்றழைக்கப்படுகிறார். தொழுது மேற்கே
திரும்பினால் வன்மீகநாதர் சந்நிதி தோன்றுகின்றது. இச்சந்நிதிக்குச்
செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும்.
சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால்
அதிகார நந்தி காட்சி.

உள்ளே வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர்,
சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர்
(ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவிவழிச்
செய்தி) சந்நிதிகளைத் தரிசித்துச் சென்றால் மூலவர் தரிசனம் -
வன்மீகநாதர்.     சுவாமியின் வலப்பால் அர்த்த மண்டபத்தில்
சோமகுலாம்பிகை சந்நிதி. அடுத்துள்ளது தியாகராஜா சந்நிதி - எதிரில்
நந்தி. மூலாதாரக் கணபதி, நால்வர், பஞ்சமுகவாத்யம், அறுபத்துமூவர்
உற்சவமேனிகள், மூலத்திருமேனிகள் ஆகியவை தொழுதவாறே தென்னன்
திருவாசல் வழியாகச் சென்று, தியாகேசப் பெருமானைத் தொழலாம்.
இரத்தின சிம்மாசனத்தில் செல்வத்தியாகர் முன்னே இருவாட்படை
விளங்க நடுவில் பூச்செண்டு பொருந்த எழுந்தருளிக்காட்சி தருகிறார்.

தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை ‘கொண்டி’ எனப்படுபவள்.
தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒருபீடத்தில் உள்ள பெட்டகத்தில்
வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான்
நாடொறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராசாவின்
முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராசாவின்
இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு
தரிசிக்கவேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும் -
அவை மிகவும் ரகசியமானவை.

வரும்போது வாதாபி கணபதியைத் தொழலாம். அடுத்து
சஹஸ்ரலிங்கம், பிட்சாடனர், மகாலட்சுமி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி,
உற்சவ மூர்த்தங்கள் ஆகியவைகளைத் தரிசித்தவாறே வந்து, மந்திர
பீடத்தையும் தொழுதல் வேண்டும். நவக்கிரகங்கள் நேர்வரிசையில்
உள்ளன.

வடக்குப்பிராகாரத்தில் உள்ள ரணவிமோசனேசுவரர் சந்நிதியில்
சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும் ; கடன்கள் நீங்கும்,
காணிக்கையாக உப்பு கொட்டப்படுகிறது.

இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.

(1) எமசண்டர் -

எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான்.

(2) ஆதிசண்டர - (சண்டேஸ்வரர்)

சந்திரசேகர் கோயில், பைரவர் சந்நிதி தரிசிக்கத் தக்கது. அம்மையின்
கோயில். தேவி நீலோத்பலாம்பாள் (அல்லியங்கோதை) நான்கு
திருக்கரங்கள் - இவற்றுள் இடக்கரம், தோழி இடுப்பில் தூக்கி வைத்துக்
கொண்டிருக்கும் முருகனின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வமைப்பு மிகவும் அற்புதமானது.

கமலாலயத்தின் குளத்தின் மத்தியில் உள்ளது யோகாம்பாள் சமேத
நாகநாத சுவாமி கோயிலாகும். பிரதோஷ காலத்தில் இங்கு வந்து
வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும். திருமுறைப் பாடல்கள்,
திருவாரூர் மும்மணிக்கோவை, திருவாரூர் நான்மணிமாலை, குறவஞ்சி,
பள்ளு, திருவாரூர் உலா, முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்
ஆகியோரின் கீர்த்தனைகள், கமலாம்பிகைமீது சியாமா சாஸ்திரிகள்
பாடியுள்ள நவாவரணக் கிருதிகள் முதலியவைகள் இத்தலத்தைப் பற்றியும்
சுவாமி அம்பாளையும் புகழ்ந்து பாடுபவை.

பரவையுண்மண்டளி மற்றொரு தலமாகும். இது தேர் நிலைக்கு
அருகில் கீழவீதியில் உள்ளது. தனிக்கோயில் - கிழக்கு பார்த்த சந்நிதி.
வருணன் அனுப்பிய கடலை சுவறச் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள
தலம். துர்வாச முனிவர் பூசித்தது.

இறைவன் - தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் தூவாநாயனார்
கோயில் என்றழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம்
திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார்
கோயிலும் உள்ளன.

வன்மீகநாதரின் சந்நிதியிலுள்ள நந்தியின் மேற்பரப்பிலுள்ள கல்லில்
27 நட்சத்திரங்களும் இராசிச் சக்கரமும் அமைந்துள்ளன. இத்தலத்து
தேர் அழகுடையது - ஆழித் தேர் என்று பெயர். தியாகேசர் சந்நிதியில்
தேர் வடிவில் ஒரு விளக்கு உள்ளது. பஞ்சமுக வாத்யம் சிறப்பானது -
ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்தி வடிவிலும், ஒன்று
தாமரைப் பூப் போலவும், ஒன்று எவ்வித அடையாளமுமில்லாமலும்,
நடுவில் உள்ளது பெரியதாகவும் இருக்கும். மான் தோலால் கட்டப்பட்டது.

இஃது, ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது
ஏழு முறையும், ஐந்திலும் சேர்ந்து அடிக்கும்போது முகத்திற்கு ஒன்றாக
ஐந்து முறையும் அடிக்கப்படும். இங்கு வாசிக்கப்படும் நாதஸ்வரம் -
மிகப் பெரியது. நாடொறும் ஆறு கால பூஜைகள். பங்குனிப் பெருவிழாவும்
சித்திரை வசந்தோற்சவமும் ஆடிப்பூரமும் சிறப்புடையன. எல்லா
விழாக்களும் மாதாந்திர உற்சவங்களும் முறையாக நடைபெறுகின்றன.

இக்கோயிலில் மட்டுமே செய்யப்படும் முசுகுந்த சஹஸ்ரநாம
அர்ச்சனைக்கு     ரூ. 3,500/-     கட்டளையாகும்.     இவ்வர்ச்சனை
ஆண்டுதோறும்     தைமாதத்தில்     தியாகராஜாவுக்குக் கோயிலில்
செய்யப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மிகப் பெரிய கட்டளைகளுள்
மிகப் பெரியது அபிஷேகக்கட்டளை. அடுத்தது ராஜன் கட்டளை. ராஜன்
கட்டளை தருமையாதீனத்தின் பொறுப்பில் உள்ளது. இவற்றைத் தவிர
அன்னதானக் கட்டளை, உள்துறைக் கட்டளை முதலிய பலவும் உள்ளன.

தியாகராஜ லீலை - மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியது.

அஜபாரஹஸ்யம், தியாகராய லீலை, தியாகராஜபுர மான்மியம் முதலாக
16 நூல்கள் இத்தலத்தைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் உள்ளன.
கீழ்க்கோபுரத்திற்கு இடப்புறத்தில் ஆரூரான் கல்யாண மண்டபம்
கட்டப்பட்டுள்ளது.

கமலாலயக் கரையில் வடபால் பச்சையப்ப முதலியார் சத்திரமுள்ளது.
வடகரையில் திருவாவடுதுறை ஆதீன மடமும் தெற்கு வீதியில்
தருமையாதீன ராஜன்கட்டளை மடமும் உள்ளன. இக்கோயிலில் 65
கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சோழர் காலத்தியவை.
செம்பியன்மாதேவி ஆரூர் அரநெறிக் கோயிலைக் கட்டியதாகக்
கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆண்டொன்று ஐம்பத்தாறு திருவிழாக்கள்
நடைபெற்றனவாம்.

முன் பின்