சிவன்கோவில் - திருப்பாச்சிலா கிராமம்

சோழநாட்டு (வடகரை)த் தலம்.

திருச்சி-சேலம் பேருந்துச் சாலையில் உள்ளது. (12 கி.மீ. தொலைவு)
“பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற
பெயர் பெற்றது. திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று
வழங்குகிறது.

சுந்தரர் பொன்பெற்ற தலம். பிரமன், லட்சுமி, உமாதேவி வழிபட்டது.
கொல்லி மழவனின் புதல்விக்கு நேர்ந்த ‘முயலகன்’ நோயைச் சம்பந்தர்
தீர்த்த பதி. இதனால் நடராசர் திருவடியில் முயலகனுக்குப் பதிலாக
பாம்பு உள்ளது. (சர்ப்ப நடன மூர்த்தி) (‘முயலகன் என்பது வலிப்பும்
வயிற்று வலியும் வரும் ஒரு வகை நோய்)

இறைவன் - 1) மாற்றறிவரதர் (சுந்தரர் தம் பொன்னை மாற்றுக்
குறைவதாக உரைத்துக் காட்ட அறிந்த பிரான்)
2) சமீவனேஸ்வரர், (வன்னிசூழ்ந்த வனத்தில்
உள்ளவர்)
3) பிரமபுரீசுவரர், (பிரமன் வழிபட்டவர்)
இறைவி - பாலாம்பிகை, பாலசௌந்தரி
தலமரம் - வன்னி
தீர்த்தம் - சிலம்பாறு. (பங்குனியாறு, அமலையாறு என்றும் கூறுவர்)

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

கோயில்    ஊர் நடுவே    கிழக்கு    நோக்கியுள்ளது. முதற்
கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் ஆவுடையாப்பிள்ளை மண்டபம் எனப்படும். இம் மண்டபத்தூணில்
சம்பந்தர், கொல்லிமழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள்
உள்ளன.

சுவாமி சந்நிதியில் சுந்தரருக்குப் பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம்
உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு “கிழி கொடுத்தருளிய திருவாசல்”
என்ற    பெயரால்    குறிக்கின்றது. “பாச்சில் திருவாச்சிராமத்துப்
பெருமானடிகள்” என்பது இறைவனின் கல்வெட்டுப் பெயர். இங்குள்ள
சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப் பாடும் அமைப்பில்
உள்ளது.

இக் கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற்
குலோத்துங்கன்,    கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள்
செய்துள்ளனர். கி.பி.1253ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு
ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்
கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்துவந்ததாகக் கல்வெட்டு
மூலம் அறிகிறோம். அம்பாள் சந்நிதி சுவாமியை நோக்கி மேற்காக
விளங்குகிறது. எதிரில் குளமும், கரையில் வன்னிமரமும் உள்ளன.

“துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர் கொங்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர் கோலமெலாஞ் செய்து பாச்சிலாச் சிராமத் துறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்போ”
                    (சம்பந்தர்)

“ஒருமையேயல்லேன் எழுமையும் அடியேன்
அடியவர்க்கு அடிமையுமானேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி
லாச்சிராமத் தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
இவரலாது இல்லையோ பிரானார்.”
                    (சுந்தரர்)

“இட்ட குடிநீர் இருநாழி ஒர் உழக்காச்
சட்ட ஒருமுட்டைநெய் தான்கலந் -தட்ட
அருவாச்சா ரென்றங் கழாமுன்னம் பாச்சிற்
றிருவாச்சி ராமமே சேர்.”
                 (ஐயடிகள் காடவர்கோன்)

                -எஞ்ஞான்றும்
ஏச்சிராமங் கலத்தோடின்பந் தரும்பாச்சி
லாச்சிராமஞ்சேர் அருள்நிலையே
                 (அருட்பா)

அஞ்சல் முகவரி :-
அ/மி. மாற்றறிவரதர் திருக்கோயில்
திருவாசி & அஞ்சல் 621 216.
(வழி) பிச்சாண்டார் கோயில் - S.O. திருச்சி மாவட்டம்.