ஏகாம்பரநாதர் கோவில் - காஞ்சிபுரம் 1

பஞ்சமுக விநாயகர் தரிசனம். இது பிற்காலப் பிரதிஷ்டை, (1-2-1979)ல்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.) அடுத்து வருவது மாவடி. தலத்திற்குரிய
பெருமையுடையது. மாதவச் சிவஞான சுவாமிகள் “மருமலர்த்தனிமா”
என்று இதைக் குறிப்பிடுகின்றார். மாவடியை வலம் வரும் அமைப்பில்
பிராகாரமுள்ளது. துவார கணபதியையும், ஆறுமுகரையும் வணங்கி,
மேலேறிச் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசிக்கலாம். பீடத்தின்
அடியில் பஞ்சாக்கினி தவம், இலிங்கோற்பவ வரலாறு : அம்பிகை
தழுவும் கோலம் முதலிய சிற்பங்கள்உள்ளன.

மாமரம் இத்தல மரம். இவ்விடம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய
இடமாகும். திருமணங்கள் நடைபெறுமிடம். புத்திரப் பேறில்லாதவர்கள்
அப்பேறு வேண்டி, தொட்டிலைக் கட்டி வேண்டிக்கொள்ளும் நிலையை
இன்றும் காணலாம்.

வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின்
நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600
ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின்மீது
ஏறுவதுகூடாது. இயல்பாகவே பழுத்துக் கீழே விழும் கனிகளைச்
சுவைத்தோர், நான்கு கிளைகளிலிருந்தும் கிடைக்கும் மாங்கனிகள் நான்கு
விதமான சுவையுடையதாகச் சொல்கின்றனர்.

தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான்
காட்சி தந்தருளினார். ‘ஒருமாவின்கீழரையர்’ என்பது தனிப்பாடல்.
இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து,
பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய
ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலப்பால் படிகளேறிச்
சென்றால் ‘ஏலவார் குழலி’ - அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது.
நின்ற திருக்கோலம். அழகான திருமேனி.

பக்கத்தில் ‘மாவடிவைகும் செவ்வேள்’ சந்நிதி. குமரகோட்டம்
என்னும் பெயரில் தனிக்கோயில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில்
இருந்தாலும், அப்பெருமானின் அருள் வரலாற்றைக் கூறும் கந்தபுராணம்
இத்தலத்தில் தோன்றினாலும், அதில் ‘மூவிரு முகங்கள் போற்றி’ எனும்
பாடலில் வரும் “காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி”
என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார்.

இச்சந்தியில் உற்சவத் திருமேனி (வள்ளி தெய்வயானையுடன் கூடி)
முன்னால் இருக்க, பின்னால் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.
அடுத்த தரிசனம் நடராச சபை - இடப்பால் உள்ளது.

11-12-1961ல் புதியதாக நிறுவப்பட்டது. முன் மண்டபம் அழகாக
உள்ளது. சபையில் அம்பலக் கூத்தருடன் சிவகாமியும் மாணிக்கவாசகரும்
காட்சி தருகின்றனர். தரிசித்து வெளி வந்தால் பக்கத்தில் ‘பைரவர்’
சந்நிதி. அடுத்துள்ளது யாக சாலை. எதிரில் வலப்பால் நவக்கிரக சந்நிதி.
கிரகங்கள் உரிய வாகனங்கள் மீது அமர்ந்து உரிய திசைகளை
நோக்கியிருக்கும் அமைப்பில் உள்ளன. நடுவில் சூரியன் உள்ளார்.

உள்வாயிலைத் தாண்டுகிறோம். இடப்பால் இத்தலத்து வாழ்ந்த
நாயன்மார்களான திருக்குறிப்புத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன்,
சாக்கிய நாயனார் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அடுத்து நால்வர்
சந்நிதி ; தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் ; முடிவில்
சந்தானாசாரியர்களும் உளர். எதிரில் வலப்பால் ‘வெள்ளக் கம்பர்’
சிவலிங்கத் திருமேனி உள்ளது. அடுத்துப் பிரகாரத்தில் இடப்பால்
சிவலிங்க பாணங்கள் மட்டும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதைத்
தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் திருவுருவமும், பக்கத்தில் ‘கள்ளக்
கம்பர்’ சிவலிங்கத் திருமேனியும், அடுத்து ‘மத்தள மாதவேசர்’
சிவலிங்கத் திருமேனியும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். இத்திருக்
கோயிலில் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் ஏதுமில்லை. அடுத்து
இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

நேரே நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி. இச்சந்தியின் பக்கத்தில்
‘நல்ல கம்பர்’     சிவலிங்கத்     திருமேனியும்,     அடுத்து, சற்று
உள்ளடங்கியதாகச் சூரியன் திருவுருவமும் உள்ளன. நாடொறும் ஆலய
பூஜை இச்சூரிய பகவான் வழிபாட்டிலேயே தொடங்குகின்றது.

(நிலாத்துண்டப்     பெருமாள்     சந்நிதி திருமங்கையாழ்வாரின்
மங்களாசாசனம் பெற்றது. இங்கு, தீர்த்தம் தரப்பெற்றுச் சடாரியும்
சிவாசாரியாரால் சார்த்தப்படுகிறது. இச்சந்நிதியில் சிலாரூபமான திருமேனி
வழிபாட்டில் உள்ளது. (பக்கத்தில் உள்ள சுதைரூபம் வழிபாட்டில்
இல்லை.)

மூலவரைத் தரிசிக்கச் செல்லுகிறோம். ஆலந்தானுகந்து அமுத செய்த
பிரான் பிருதிவி(மணல்)லிங்கமாகக் காட்சி தருகிறார். பாணம் சற்று
கூசாகவுள்ளது. இதன்மீது தண்ணீர்படக்கூடாது. அபிஷேகங்கள்
முதலிய அனைத்தும் ஆவுடையாருக்கே. இலிங்கபாணத்திற்குப் புனுகுச்
சட்டம் மட்டும் சார்த்தப்படுகிறது. பின்னால் சுவரில் சோமாஸ்கந்தர்
திருமேனி உள்ளது.

இலிங்க வகைகளுள் அம்பாள் அமைத்து வழிபட்டஇது ‘தேவிக
லிங்கமாகும்’. திங்கட்கிழமைதோறும் தல மகிமைத் தொடர்பான -அம்மை
தழுவும் கோலமுடைய - கவசம் சார்த்தப்படுகிறது.

ஏலவார்குழலாள் என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற காலகாலனாம்
கம்பன் எம்மானைக் கண்குளிரக் கண்டு மகிழ்கிறோம். தரிசனம் முடித்து
பக்கவாயில் வழியாக இறங்கிச் சண்டேசுவரரை வணங்க வழியுள்ளது.
ராஜகோபுரம் தெற்கு நோக்கியிருப்பினும் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார்.

மூலவரைத் தரிசித்து, சண்டேசுவரரின் அருள் பெற்று வெளியே வந்து
கொடி மரத்தின் முன்பு வீழ்ந்து வணங்கி வழிபாட்டை நிறைவு
செய்கிறோம். வெளியில் பெரிய நந்தி உருவம் உள்ளது. இதற்குப்
பக்கத்தில் ‘வாலீசம்’ தனிக் கோயிலாகவுள்ளது.

செயல் அலுவலரின் அலுவலகத்திற்குப் பக்கத்தில் குளத்தையொட்டி
‘ரிஷபேசம்’ கோயில் உள்ளது.

கச்சிமயானத்தின் முன்புள்ள தூணில் ஆதிசங்கரர், தக்ஷிணாமூர்த்தி
சிற்பங்கள் உள்ளன. சபாநாயகர் மண்டபத்தில் சந்நிதிக்கு எதிரில் உள்ள
இருதூண்களில் ஒன்றில் அன்ன வாகனத்தில் ஒருபுறம் ரதியும் மறுபுறம்
மன்மதனும் ; அவ்வாறே எதிர்த் தூணில் கிளி வாகனத்தில் ஒருபுறம்
ரதியும் மறுபுறம் மன்மதனும் சிற்ப வடிவில் உள்ளனர்.

நவக்கிரகம் வணங்கி, உள்வாயிலுக்கு அருகில் இறங்கும் படிகளில்
இறங்கும்போது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும்
சிற்பமும் எதிர்த்தூணில் பிட்சாடனர் சிற்பமும் இருப்பதைக் காணலாம்.

நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பூஜை முறைகள்
‘காமிக’ ஆகம அடிப்படையில் அமைந்தவை. ரதசப்தமி நாளில் சூரிய
ஒளி சுவாமிமீது படுதலைக் கண்டு தரிசிக்கலாம்.

திருப்பணிகள் 25-10-76ல் தொடங்கப் பெற்று மகா கும்பாபிஷேகம்
1-2-79ல் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுமே ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால்
நடத்தி வைக்கப்பட்டன. இக்கும்பாபிஷேகத்தை நகரத்தார்கள் செய்து
தந்தது குறிப்பிடத்தக்கது.

முன் பின்