ஊர்த்வ தாண்டீஸ்வரர்கோவில் - திருவாலங்காடு


மூவர்பாடல் பெற்ற தலம்.

கோயிலின் முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. முகப்பு
வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும்,
முருகனும்,     காளியும் உள்ள சுதை     சிற்பங்கள் அழகுற
அமைக்கப்பட்டுள்ளன.

உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது. உள்கோபுரம் ஐந்து
நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால்
சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம்
மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள்,
வியாழன் காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச்
செல்கின்றனர். இம் மண்டபத்தில்தான்     நடராசர் அபிஷேகம்
நடைபெறுகிறது.

கோபுர வாயிலில் வல்லபை விநாயகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு
கரங்களுடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய
ஆறுமுகர் சந்நிதி.

வெளிப் பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன.
கோபுரவாயில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது.
வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார
மண்டபம்.

அடுத்துள்ள உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில்
ஊர்த்துவ தாண்டவம், பிரம்மா, நந்தி     மத்தளம் வாசித்தல்,
காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி,
காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக
அமைக்கப்பட்டுள்ளன.

வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால்
எதிரில் மதிற்சுவர்மீது பஞ்ச சபைகள் உரிய நடராச தாண்டவத்துடன்
வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கோபுரத்தில் உள் பக்கத்தில் தசாவதாரச் சிற்பங்கள், கண்ணப்பர்
கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது
முதலிய சிற்பங்கள் உள.

பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக
மண்டபம் -    இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில்
நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு
என்னும் பெயருக்கு ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.

அடுத்து    அம்பாள்    சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது,
நின்ற    திருக்கோலம்.    இக்கருவறையில்    கோஷ்ட மூர்த்தங்கள்
இல்லை. சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண
அழகுடையவை.    உற்சவத்    திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அவற்றுள்:- பிட்சாடனர், விநாயகர், காரைக்காலம்மையார் (தாளமிட்டுப்
பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர், கார்க்கோடகன், நால்வர்
முதலியவை சிறப்பானவை.

இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப பெருமானின்ஊர்த்துவ
தாண்டவச் சிறப்பு தரிசிக்கத்தக்கது. அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்
‘ரத்ன    சபாபதி’    என்று    அழைக்கப்படுகிறார்.    சிவகாமி,
காரைக்காலம்மையார் திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் பெரிய
ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் (சபையில்) உள்ளன. இவற்றிற்கு
நான்குகால அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச்
சபையை வலம் வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின்
உருவம உள்ளது. சுந்தரர் பதிகம் கல்வெட்டில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி    
மடத்துக் கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச் சபையின்
விமானம் செப்புத் தகடுவேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன்,
அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர்,
அகோர வீரபத்திரர், சப்தகன்னியர், நால்வர், காரைக்காலம்யைார்,
கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச
அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள்
உள்ளன.

கருவறை    நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர்,    தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்,    பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர்
உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதி
உள்ளது - பஞ்சபூதத் தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத்
தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய
சந்நிதிகளும் உள. உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது.
பைரவர் வாகனமின்றிக் காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர்
சந்நிதிகள் இல்லை.

மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே
மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர்
திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது.
நடராசாவுக்குப பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள
கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம்
எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச்
சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி.

மூலவருக்கு மேல் உருத்திராக்கவிதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி
மடத்துப்பணி உள்ளது.

மூலவரின் பக்கத்தில் போகசக்தி அம்மன் உற்சவத் திருமேனி
உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன.
பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில்
காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய ‘பழையனூர்’
கிராமம், பக்கத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி
சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர்; இறைவி -
ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.

பழையனூருக்குச் செல்லும் வழியில்,    திருவாலங்காட்டிலிருந்து
ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து
செட்டிப் பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த ‘தீப்பாய்ந்த
மண்டபம்’ உள்ளது. திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து
பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில்
இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாகம் வளர்த்து
இறங்குவது போன்ற சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய
சந்நிதியாகச் ‘சாட்சி பூதேஸ்வரர்’ காட்சியளிக்கின்றார். எதிரில்
தீப்பாய்ந்த இடம் உள்ளது.

தீப்பாய்ந்த    வேளாளர்களின்    மரபில்    பழையனூரில்
தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத்
தரிசித்துச்    செல்லும்    மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து
வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள்,
இம்மரபைப் பிற்காலத்தோரும் அறியும் வகையில் “கூழாண்டார்
கோத்திரம் சதாசேர்வை என்று கல்லில் பொறித்து, அக்கல்லை,
கோயிலின் முன்வாயிலில் உயர்ந்த படியைத் தாண்டியவுடன்
முதற்படியாக வைத்துள்ளனர்.

இம்மரபினரின் கோத்திரமே ‘கூழாண்டார்கோத்திரம்’. அதாவது
தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச்
சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும்
இச்செய்தி நெஞ்சை நெகிழவைக்கின்றது.


முன் பின்