திருமாலிருஞ்சோலையென்னும் அழகர் மலை
வரலாறு

இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம்
ஆக்னேய புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக
புராணத்தில் ரிஷபாத்திரி மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம்
பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது. ரிஷபம் என்றால் காளை.
இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும்
இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால் இதற்கு
ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.

மலய பர்வதம் எனப்படும் பொதியமலைக்கு வடக்கே 10
யோஜனை தூரத்திலும், காவிரி நதிக்குத் தெற்கே 6 யோஜனைத்
தூரத்திலும், வராக பர்வதம் எனப்படும் பழனிக்கு கிழக்கே 6
யோஜனை தூரத்திலும், அமைந்துள்ளதாக எல்லைகள் குறிப்பிட்ட
இப்பகுதியை கூடலூர் நாடு என்றும், மாலிருங் குன்றம் என்றும்,
திருமால் சோலை யென்றும் வனகிரி யென்றும் தமிழ்மொழி பல
பெயர்களைச் சூட்டுகின்றது. அதேபோல் இங்குள்ள உற்சவப்
பெருமாளுக்கும் அழகர் என்னும் வெகு அழகான சொல்
வாய்த்துவிட்டது.

மகாவிஷ்ணுவிற்கும், அவரது இராம கிருஷ்ண அவதாரங்களுக்கும்
அழகர் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை     தமிழிலும் பின்பற்றப்பட்டுள்ளது. மதுரையிலிருக்கும்
எம்பெருமானுக்கு கூடலழகர் என்பதும் ஒரு திருநாமம். இவருக்கும்
அழகர் கள்ளழகர் என்று திருநாமங்கள், குழலழகர், வாயழகர்,
கொப்பூழில்     எழுகமலப் பூவழகர் என்பது ஆண்டாளின்
மங்களாசாசனம். அச்சோ ஓரழகியவா என்பது திருமங்கை மன்னனின்
மங்களாசாசனம். இக்கள்ளழகர் என்னும் சொல்லே வடமொழியில்
சுந்தரராஜர் என்றாயிற்று. இந்த மாலிருங்குன்றத்தைப் பற்றி பரிபாடல்
என்னும் சங்ககால நூல் பின்வருமாறு கூறுகிறது.

    தாங்கு நீணிலை யோங்கிருங் குன்றம்
    நாறிணாராத் தூழாயோ னல்கி னள்லதை
    ஏறுதலெளிதோ வீறுபெற துறக்கம்
    அரிதிற் பெறு துறக்க மாலிருங்குன்றம் என்றும்
    மாயோ னெத்தலின் னிலைத்தே
    சென்று தொழுகல் சீர் கண்டு பணிமனமே
    இருங் குன்றென்றும் பெயர் பரந்ததுவே
    பெருங்கலி ஞாலத்து தொன்றியல் புகழது
             -பரி பாடல்

    சிலப்பதிகாரமும்
    “தடம்பல கடந்து காடுடன் கழிந்து
    திருமால் குன்றம் செல்குவீராயின்”
    என்று திருமாலிருஞ்சோலையைக் குறிக்கிறது.

எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து
இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட
அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன்
இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத்
தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே
எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும்,
உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம்,
கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில்
எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த
விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது
வரலாறு.

எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது ஒரு பாதத்தால்
உலகளந்துவிட்டு மறு பாதத்தால் விண்ணளக்க அது பிரம்மனின்
சத்திய லோகம் வரை செல்ல பிரம்மன் தனது கமண்டல நீரால் பாத
கமலங்கட்கு அபிஷேகம் செய்ய அந்த கமண்டல நீர் பெருமாளின்
காலிலுள்ள பொன்சிலம்பில் பட்டுத் தெறித்து இவ்விடத்தே
சிலம்பாறாகப் பெருகி இது எங்கே உற்பத்தியாகிறது என்று
சொல்லமுடியாதவாறு வற்றாத ஜீவநதியாய் ஓடிக்கொண்டு தேனைவிட
இனிமையாக     இனிக்கும் தன்மை பெற்று எம்பெருமானின்
திருமஞ்சனத்திற்கு இலக்காகி நிற்கிறது.

இந்தச் சிலம்பாறுதான் நூபுர கங்கையாகும். இந்த தீர்த்தம்
தவிர்த்து வேறு தீர்த்தங்களில் இங்குள்ள உற்சவருக்கு திருமஞ்சனம்
செய்தால் பெருமாள் கறுத்துவிடுவதால் இரண்டு மைல் தொலைவில்
உள்ள     இந்த தீர்த்தமே எப்போதும் திருமஞ்சனத்திற்குப்
பயன்படுத்தப்படுகிறது.

எம்பெருமானின் திருமேனிக்கு தீர்த்தமாகி வயல்வெளிகளில்
நெளியும் இந்த நூபுர கங்கையின் மகத்துவம் எழுத்தில் அடங்குந்
தன்மையதன்று. இதில் நீராடி விஷ்ணு சாமீப்யம் பெற்றவர் பலருண்டு.
இந்த நதி இகபர சுகத்தைத் தருவதால் இந்த நதிக்கு “இஷ்டசித்தி”
என்ற ஒரு பெயரும் உண்டு. பகவானுடைய பாதார விந்தங்களிலிருந்து
தோன்றி     ஸம்ஸார பந்தத்தினால் உண்டான அழுக்கைப்
போக்கடிக்கும் இந்நதிக்குப் “புண்யச்ருதி’. என்றும், சகல ஜனங்களின்
ஜனன மரண துக்கத்தைப் போக்கடிப்பதால் “பவஹாரி” என்றும் பல
பெயர் உண்டு.

முன் பின்