அழகிய மணவாளப் பெருமாள் கோவில்
திருக்கோழி
சிறப்புக்கள்
  1. திருப்பாணாழ்வார் இங்குதான் அவதரித்தார். இத்தலத்தில்
    அவருக்கு தனிச் சன்னதி உள்ளது.

  2. சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானை யொன்று
    இவ்வூருக்குள் வந்தபோது ஒரு கோழி அதனை யெதிர்த்து
    யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும். அலகினாலும்
    கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு
    ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற
    பெயருண்டாகித் திருக்கோழியாயிற்று. என்றுரைப்பர்.

  3. கமலவல்லித் தாயாருக்கும், ஸ்ரீ ரெங்கநாதனுக்கும் நடைபெற்ற
    காதல் நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்களை ஸ்ரீரெங்கராஜ
    சரிதபானம் என்னும் வடநூல் சிறப்பித்துச் சிலாகித்துப் பேசுகிறது.

  4. திருமங்கையாழ்வார் ஒரேயொரு பாசுரத்தால் மங்களாசாசனம்
    செய்துள்ளார். இவரும் இத்தலத்தின் பெயரை மட்டுமே
    குறித்துள்ளார். குலசேகரப் பெருமாள் (குலசேகராழ்வார்) சேர,
    சோழ, பாண்டிய மண்டலங்கட்கு மன்னனாய் இந்த உறையூரைத்
    தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தாரென்றும், அவ்வமயம்
    இக்கோவிலுக்கு மதில் எழுப்பியும் அளவற்ற நிலதானமும்
    செய்தாரெனவும் அறியமுடிகிறது.

    வரலாற்று ரீதியாக இது ஆய்வுக்குரிய விசயமாக இருந்தாலும்
    கீழ்வரும் பாடலில் குலசேகராழ்வார் (கொல்லி) கொல்லிமலை,
    கூடல், கோழி இம்மூன்றுக்கும் தம்மை மன்னன் என்று
    மறைமுகமாகச் சுட்டுவதொன்றே ஆதாரம்.

    அல்லிமாமலர் மங்கை நாதன்
        அரங்கன் மெய்யடியார்கள் தம்
    எல்லையிலடிமைத் திறத்தினில்
        என்றும் மேவு மனத்தனாம்
    கொல்லி காவலன் கூடல் நாயகன்
        கோழிக்கோன் குலசேகரன்
    சொல்லினின் தமிழ் மாலை வல்லவர்
        தொண்டர் தொண்டர்க ளாவரே
        (பெருமாள் திருமொழி 2ம் பத்து 10 ஆம் பாடல்)

  5. மிகப் பிர்ம்மாண்டமான இத்திருத்தலம் பேரழகு வாய்ந்தது.

  6. சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும்
    சோழர்களின் முதல் தலைநகரமாக இந்த உறையூர் விளங்க,
    காவிரிப் பூம் பட்டிணம் இரண்டாவது கடற்கரைத் தலைநகரமாக
    விளங்கியதென்றும். இளஞ் சேட்சென்னி என்னும் அரசன்
    இவ்வூரை ஆண்டதாகவும் இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த
    மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால் இறைவன்
    சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும், நெருப்பு மாரி இந்த
    ஊரில் பெய்ததாகவும் ஒரு வரலாறுமுண்டு. மண்மாரி பொழிந்து
    இவ்வூர் அழிந்து பட்ட தென்பதற்கே ஆதாரம் அதிகம்
    எவ்வாறெனில் நன்றாயிருந்த உறையூர் அழிந்துபட்ட தென்பதே
    நூல்கள் உரைக்கும் செய்தி, உறையூரை ஆண்ட ஆதித்த
    சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது, வில்வ
    மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவன் இவ்வூரின்
    பெருமையை அவனுக்கு உணர்த்த எண்ணி அம் மரத்தின் கீழ்
    மேய்ந்து கொண்டிருந்த கோழியை நோக்க, அது உக்கிரம்
    கொண்டு யானையைக் குத்தி வீழ்த்தியது என்றும், இதை
    உணர்ந்த பின்பே, மன்னன் இவ்வூருக்கு அந்தக் கோழியின்
    பெயரால், திருக்கோழி என்றே பெயரிட்டான். இவ்வூருக்கு,
    குக்கிடபுரி, வாரணபுரி, கோழியூர், திருமுக்கீசுரம் என்ற
    பெயர்களுமுண்டு.

  7. கரிகாலச் சோழன், குலோத்துங்க சோழன், நலங்கிள்ளி,
    கிள்ளிவளவன் முதலானோர் ஆண்ட இடமிது. நாயன்மார்களில்
    புகழ்ச் சோழர், கோச்செங்கன் சோழர் ஆகியோரின் பிறந்த ஊர்.

  8. கமலவல்லி நாச்சியாரை திருவரங்கன் அழகிய மணவாளனாக
    வந்து திருமணம் புரிந்ததை நினைவுகூறும் முகத்தான் இன்றும்
    வருடமொருமுறை     ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கன் இங்கு
    எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாசனத்தில் இங்கு
    சேவை அளிக்கிறார். இந்த திருக்கல்யாண உற்சவம் கர்ணப்
    பேரழகு வாய்ந்தது.

முன்