காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா
திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர்
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே - (1159)
பெரிய திருமொழி 3-2-2
காயோடு கனிகளை உண்டு, காற்றை நுகர்ந்து, வேள்விகளுக்கு
சொல்லப்பட்ட ஐந்து தீயினையும், வளர்த்து கடுந்தவம் செய்ய
வேண்டாம். வேதம் உணர்ந்த மறையோர்கள் தினமும் முறைப்படி
வளர்த்த வேள்வித்தீ ஓங்கும் அளவிற்குப் புகழோங்கி நிற்கும்
திருச்சித்திர கூடத்தில் பள்ளிகொண்ட திருமகள் சேர்மார்பனைச்
சிந்தையில் வைத்தாலே போதும்.
என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் இன்றைய
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நகரங்களுள் ஒன்றாகும், சுற்றுலாப்பயணிகள்
எந்நேரமும் வருகை தரக்கூடிய சுற்றுலாக் கேந்திரமாயும் திகழ்கிறது.