தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் - திருத்தண்கா
வரலாறு

இத்தலம் பற்றி பிரம்மாண்டபுராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது
துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட
பிரம்மன் தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை
துவக்கினான்)

பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க
எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப்
போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து
இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே
சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில்
ஆழ்த்தினாள்.

திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால்
உணர்ந்த பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத்
துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம்
சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின்
யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை
மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில்
வைத்தார்

ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான்
பிரம்மன். யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன்
விஸ்வகர்மாவை நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா
யாக சாலையை மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான்.
விஸ்வகர்மாவுடன் தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும்
கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர்.
ஆனால் பிரம்மனோ தேவர்களை மட்டும் எதிர்கொண்டழைத்து
அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும்
சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய அவர்கள்
பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம்
வந்து சேர்ந்தனர்.

பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால்
தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது
என்று பலவிதமாகக் கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும்
சினந்த சரஸ்வதி நானும் பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன்.
என்ன செய்யலாமென நீங்கள் கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள்
கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால்
அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத் தன்னுள் கிரஹித்துக்
கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும்
பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. மாய
நலன் என்பது அவனது பெயர்.

கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த
அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது
கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம்
நல்கினார்.

இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால்
தீபப் பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார்.

முன் பின்