நாண்மதியப் பெருமாள் கோவில்
திருத்தலைச்சங்க நாண்மதியம்

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
    தன்னார் தாமரைசூழ் தலைச்சங்க மேல் திசையுள்
விண்ணோர் நான்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
    கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றதிங்
            கென்று கொலோ
            (1736) பெரியதிருமொழி 8-9-9

என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சோழநாட்டுத்
திருப்பதிகளுள்     மிகவும் தொன்மைவாய்ந்ததாகும். பழந்தமிழ்
இலக்கியங்களில் இத்தலத்தைப் பற்றிய பல செய்திகளடங்கிய
குறிப்புகள் கிடைக்கின்றன. புராணங்களிலிருந்து சந்திரனுக்கு உண்டான
சாபத்தைத்     தீர்த்து     இவ்விடத்தில் பெருமாள் அவனுக்கு
காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.

சீர்காழிக்கு தென்கிழக்கே சுமார் 12 மைல் தொலைவில்
அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் போய் அங்கிருந்து
சீர்காழி செல்லும் பாதையில் 2 மைல் தூரம் சென்று இத்தலத்தை
அடையலாம். தற்போது ஆக்கூரிலிருந்து இவ்வழியாகப் பல
பேருந்துகள் செல்கின்றன. சீர்காழியிலிருந்தும் தற்போது பேருந்து
வழிகள் உண்டு. பேருந்துகள் செல்லும் சாலையில் இத்தலத்தின் பெயர்
எழுதப்பட்டுள்ள இடத்திலிருந்து இறங்கி சுமார் 2 பர்லாங் தூரம்
சென்று இத்தலத்தை அடையலாம்.

தலைச்சங்க நாண்மதியம் என்றால் இங்கு தெரியாது. தலைச்சங்காடு
என்ற பெயரே தற்போது பிரதானமாய்த் திகழ்கிறது.

திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகி திருச்சியானது
போலவும், துலை, வில்லி, மங்கலம் என்பது பொருள் காணவியலாத
அளவிற்குத் தொலைவில்லிமங்கலம் ஆனது போலவும். காழிச்சீராம
விண்ணகரம் என்பது நிலைதடுமாறி (தடம்புரண்டு) சீர்காழியானது
போலவும், திருத்தண்கால் என்பது திருத்தங்கல் ஆனது போலவும்,
திருமெய்யம் என்பது திருமயம் ஆனது போலவும், தலைச்சங்க
நாண்மதியம் என்பது தலைச்சங்காடு ஆயிற்று.

பின்