மகர நெடுங்குழைக்காதப் பெருமான்
கோவில் - தென்திருப்பேரை

சிறப்புக்கள்
 1. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம்
  நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு
  திசை சென்று வருணனுடன் போரிட்டு வருணனைத்
  தோற்கடித்தனர், தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான
  ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்ற றியாது திகைத்து தனது
  குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய
  வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை
  அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.

  இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை
  என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன்
  எழுந்தருளியுள்ள திருப்பேரை சென்று அப்பெருமானைக்
  குறித்துத் தவம் செய்வதொன்றே யாகு மென்றார்.

  அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான்
  தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட
  அது பாசம் ஆயிற்று. வருணன் தனது பாசத்தையும், இழந்த
  நகரத்தையும் பெற்றான்.

  இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து
  பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம்
  செய்து வருவதாக ஐதீகம்.

  இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

 2. ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு
  பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன்
  இதற்கான காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ,
  இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல
  என்று கூறிய அரண்மனைப் புரோகிதர், மழைக்கு அதிபதியான
  வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை
  எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை
  என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான
  பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து
  விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு
  நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

  இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

 3. வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய
  கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து
  சுக்கிரனும் இங்கு வந்து தவம் செய்து திருமாலின் அருள்
  பெற்றான் எனவும் கூறுவர்.

 4. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால்
  பாடப்பட்டுள்ளது.

 5. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில்
  மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரவு வசதியுள்ளது.
  நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற     அமைந்துள்ளது
  இக்கிராமம்.

 6. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
முன்