காளமேகப் பெருமாள் கோவில் - திருமோகூர்

வரலாறு

பிர்ம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் பேசப்படுகிறது.
மாத்ஸய புராணத்தில் 11 முதல் 14 வரையுள்ள 4 அத்தியாயங்களில்
பேசப்படுகிறது.

இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்று மேற்படி
புராணங்கள் குறிக்கின்றன. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி,
பாண்டிய தேசத்தில் விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு)
தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி
எனவழைக்கப்படும் யானை மலை உள்ளது, அதற்குச் சற்றே தென்
கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் (ஒரு காலத்தில் பிரம்மன் தவம் செய்து
பயன்படுத்திய தடாகம்) என்ற தடாகமுள்ளது. இதனையும் இதனைச்
சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம
தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம்.

ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் சென்று மஹா விஷ்ணுவைத்
துதித்து சாகாவரமளிக்கும் அமிர்தம் வேண்டும் எனக் கேட்க,
அவ்விதமே அவர்களுக்கு வழங்குவதாக வாக்களித்த திருமால்,
தேவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு பாற்கடலைக் கடைந்து
அமுதமெடுக்க ஆயத்தமானார்.

மந்தர பர்வதம் என்னும் மலையை மத்தாகவும், வாசுகி என்னும்
பாம்பை பெரிய கயிறாகவுங் கொண்டு ஆயிரம் கைகளால் பாற்கடலைக்
கடைந்தனர். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் காளகூட
விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக
விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர்
தோன்றினர்.

இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின.
இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம்
உண்டாயிற்று.

இதில் உச்சை சிரவசு என்னும் குதிரையும், ஐராவதம் என்னும்
யானையும் இந்திரனை அடைந்தன. காமதேனுவை வசிட்டரும்,
அகல்யயைக் கௌதம முனிவரும், விஷத்தையும் சந்திரனையும்,
பரமசிவனும் பெற்றார்கள், லட்சுமியும், கௌஸ்துப மணியும்
மஹாவிஷ்ணுவைச் சார்ந்தன.

அமிர்தத்தை எடுக்க தேவர்கள் விரைந்ததும், அசுரர்களும் ஓடி
வந்து தமக்கும் பங்கு கேட்டனர். அமிர்தம் வேண்டிநெடுங்காலம்
மஹாவிஷ்ணுவைக் குறித்து துதி செய்தது நாங்கள்தான். எங்கள்
வேண்டுதலுக்கு இசைந்து தான் பெருமாள் பாற்கடல் கடைந்தார்,
எனவே உங்களுக்கு அமிர்தம் கிடையாதென்றனர் தேவர்கள்.

உடனே தேவாசுர யுத்தம் தொடங்கி விட்டது, யுத்தத்தில்
அசுரர்களின் கை ஓங்கிக் கொண்டே வந்ததும், தம்மைக் காப்பாற்றுமாறு
தேவர்கள் திருமாலைத் தொழ, தேவரட்சகனான திருமால் ஒரு அழகான
மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு
தேவர்களையும், அசுரர்களையும் நோக்கி நீங்கள் இரண்டு வரிசைகளாக
அமர்ந்து கொள்ளுங்கள் நான் அமிர்தத்தை உங்களுக்குப் பகிர்ந்து
தருகிறேன் என்று சொல்ல, தேவர்கள் ஒரு வரிசையிலும், அசுரர்கள்
ஒரு வரிசையிலும் அமர்ந்தனர்.

அசுரர்கள் மோகினியின் அலங்காரத்திலேயே மனதைப் பறி
கொடுத்தவர்களாயிருந்து கொண்டு சலன சித்தத்துடன் வீற்றிருக்க,
மோகினி அவதாரங்கொண்ட பெருமாள் தேவர்களுக்கு மட்டும்
அமிர்தத்தைக் கொடுத்துக்கொண்டு வந்தார்.

இதனைக் கண்ட ராகு, கேதுக்களிருவரும் தேவர்களின் வடிவங்
கொண்டு தேவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டனர்.
இவர்களிருவரும் சந்திரனாலும், சூரியனாலும் திருமாலுக்கு காட்டிக்
கொடுக்கப்பட்டனர். சினங்கொண்ட திருமால் தமது சக்ராயுதத்தால்
அவ்விருவரின் சிரங்களைக் கொய்தார். இதனால், சூரீய, சந்திரர் மீது
பகைமை பூண்ட ராகு கேதுக்கள் பருவ காலங்களில், சூரிய சந்திரனைப்
பிடித்து அவர்களது பலத்தை குறைக்கிறார்கள்.

பெருமாள் மோகினி அவதாரங்கொண்டு, திருப்பாற் கடலில்
கடையப்பட்ட     அமிர்தத்தை இவ்விடத்திலிருந்து தேவர்கட்கு
வழங்கினமையால் “மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில்
மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.

திருப்பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஒரு துளியானது
இந்த சேத்திரத்தில் விழுந்ததாகவும், அவ்விடத்தில் தேவர்களால் ஒரு
குளம் வெட்டப்பட்டதென்றும், அந்த தீர்த்தத்திற்கு க்ஷீராப்தி தீர்த்தம்
(திருப்பாற்கடல்) என்ற பெயருண்டாயிற்றென்றும் மாத்ஸய புராணம்
கூறும்.

புலஸ்தியர் என்னும் முனிவர் துவாபரயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனை
குறித்து இத்தலத்தில் தவமியற்றினார். பாற்கடல் கடையுங்கால்
பெருமாள் கொண்ட கோலத்தை இச் சேத்திரத்தில் காணவேண்டும்
என்று கடுந்தவம் இயற்றினார். இவரின் தவத்தை மெச்சிய எம்பெருமான்,
புலஸ்தியர் விரும்பியவாறே அவருக்கு காட்சிக் கொடுத்தது
மட்டுமின்றி, புத்திரப்பேறு இல்லாதிருந்த புலஸ்தியருக்கு “விச்ருவர்”
என்ற பெயர் கொண்ட புத்திரனை விரைவில் பெறுவதற்கான
வரத்தையும் அளித்தார்.

எனவேதான் இங்கு பாற்கடல் வண்ணனுக்கு திருப்பாற்கடல்
நாதனாக காட்சி தரும்) தனிச் சந்நிதியுள்ளது.

முன் பின்