மின்னனைய நுண்ணிடையார்
விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவளைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த
இருடீ கேசா முலையுணாயே
(133) பெரியாழ்வார் திருமொழி 2-2-6
என்று கண்ணனை மைந்தனாகவும் தன்னைத் தாயாகவும் வைத்து
எம்பெருமானை முலைப்பால் அருந்த வருமாறு கொஞ்சியழைக்கும்
இப்பாடலில் காட்டப்பட்ட வில்லிபுத்தூர், காமராஜர் மாவட்டத்தின் மிக
முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், “கோதாதேவி அவதாரஸ்தலம்”
என்று வட இந்தியாவில் புகழ் பெற்றதுமான இந்நகரம் இயற்கைஎழில்
கொஞ்ச அமைதியான சூழலில் திகழ்கிறது. சிவகாசியிலிருந்து
(டவுண்பஸ்) நகரப் பேருந்தில் செல்லலாம். மதுரையில் இருந்து
இராஜபாளையம், தென்காசி, குற்றாலம் வழித்தடத்தில் செல்லும் எல்லாப்
பேருந்துகளும் வில்லிபுத்தூர் வழியாகவே செல்லும்.