நித்திய கல்யாணப்பெருமாள்கோவில் - திருவிடந்தை
வரலாறு

முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன்
இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி
வந்தான். அக்காலத்தில்மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று
அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்யபலியின் உதவியைக்
கேட்டனர் பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து
தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.

அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து
வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து
வந்து தேவர்கள் தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான்.
தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து
மோட்சம் நல்கி சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ
குளத்தில் நின்றருளினார்.

இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனிஎன்னும் ஒருரிஷி
தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே
சுவர்க்கம் செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ
மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று
சொல்லி, அங்கு தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம்
இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார்.

அம்முனிவர்களுள்    காலவரிஷி    என்பார்    அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய
பிராட்டியார் அம்சமாக)பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப்
பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன்
செயலே என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம்
என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார். பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக்
கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச
யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி
தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு
எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி யென்றும்,
தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும்
இசைந்து இங்குவந்த வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து
வரலாயினார்.

இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி
வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக
வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது
பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை
முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும்
அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும்
திருமணம் செய்து கொண்டார்.

கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360
கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது
இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார்.
திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான்
ஆன    படியால் திரு+இட+எந்தை    திருவிடவெந்தையாயிற்று,
காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.

முன் பின்