தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-முயற்சி

 • 6.5 முயற்சி

  சிறந்ததொரு வாழ்க்கைக்கு முயற்சி மிக மிகத் தேவை அல்லவா? நமக்கு யார் உதவி செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது. அளவுக்கு மீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கொண்டால், அந்நோயைப் போக்குவதும் அவராலேயே முடியும். அதுபோல் நமக்கு வரும் துன்பங்களை நாமே போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

  தமக்கு மருத்துவர் தாம்
  (பழ:149)

  என்பது பழமொழி.

  முயற்சி மிக உடையராய் வருந்தி வினை செய்பவர் வாழ்க்கையே சிறப்புறும். முயன்று பாடுபடாதவர் வாழ்க்கை செம்மை உறுவதில்லை. இக்கருத்தைச் சொல்லும் பழமொழி.

  வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று
  (பழ:151)

  அறிவில்லாதவர் ஒரு தொழிலிலும் நிலைபெறாது சுற்றிச் சுற்றி வருவர். அதனால் எந்த நன்மையும் பெறாது வாழ்நாளை வீணே கழிப்பர். இக்கருத்தைச் சொல்ல முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழியைப் பாருங்கள்!

  உலக்கை மேல் காக்கை
  (பழ:157)

  காக்கை உரலின் கண் உள்ள அரிசியை உண்ணவும் உண்ணாது. உலக்கையை விட்டு நீங்கவும் செய்யாது. அதனைச் சுற்றி வருதல் போல அறிவிலாரும் ஒருவரிடமும் நிலைத்து நிற்கமாட்டார். எப்பயனும் பெறவும் மாட்டார்.

  6.5.1 தெரிந்து செய்தல்

  புராண இதிகாசங்களில் வரும் நிகழ்வுகளையும் பழமொழியில் எடுத்தாளுகிறார் முன்றுறையரையனார். மாவலி என்ற மன்னனின் செருக்கை அடக்க, கண்ணன் மிகச் சிறிய வாமன வடிவம் எடுத்து வந்து நின்றான். மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டான். உடன் இருந்த அமைச்சன் கண்ணன் தந்திரம் மிக்கவன்; நின் செருக்கை அடக்க வந்திருக்கிறான்; மூன்றடி நிலம்தர ஒத்துக்கொள்ள வேண்டாம் என்கிறான். அதைக் கேளாமல் இது எனக்கு எளியது என்று கருதித் தருகிறேன் என்றான் மாவலி. கண்ணன் பேருருவங்கொண்டு ஈரடியால் உலகளந்து மற்றோரடிக்கு இடமின்மையால் அவன் தலைமீதே கால் வைத்து அளந்தான். ஆராயாத செயலால் தனக்குத் தானே துன்பம் விளைவித்துக் கொண்டான் மாவலி. ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

  ஆஅம் எனக்கெளி தென்று உலகம் ஆண்டவன்
  மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
  தோஒ முடைய தொடங்குவார்க் கில்லையே
  தாஅம் தரவாரா நோய்

  (பழ:183)


  (மேஎம் = மேவும், தன்னோடு பொருந்தியிருக்கும்; தாஅம் = தாமே; தோஒம் = குற்றம்)

  6.5.2 கருமம் முடித்தல்

  ஒரு செயலைச் செய்து முடிக்க எண்ணுபவர் அதுவே குறிக்கோளாய் இருத்தல் வேண்டும். நம் செயலைச் செய்து முடிக்க வல்லாரது குறைகளைக் கூறித் திரியக் கூடாது. இக்கருத்தைச் சொல்ல வந்த முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழி

  தொளை எண்ணார் அப்பம் தின்பார்
  (பழ: 165)

  அப்பத்தை உண்ண விரும்பியவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர் அதில் உள்ள துளைகளை எண்ணிக் குற்றம் கூறி நீக்குவதில்லை. துளைகளை எண்ணாது அப்பத்தைத் தின்பது போல, நாமும் குறை கூறித் திரியாமல் கொள்ள நினைத்த பயனைக் கொள்ள வேண்டும்.

  பசுவிடம் பால் கறக்க நினைப்பவர் கன்றினைச் செலுத்திப் பால் அருந்த விட்டுப் பின்னரே பால் கறக்க வேண்டும். அங்ஙனம் கறவாது அம்பினைச் செலுத்தி பசுவிடம் பால் கறக்க இயலுமா? அதுபோல நமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியும் இருந்து செயலை முடித்துக் கொள்ள வேண்டுமாம். இக்கருத்தைக் கூறும் பாடலைப் பாருங்கள்!

  அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது
  நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
  கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்
  அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு

  (பழ:166)

  ( = பசு)

  வினை முடிக்கும் நிலையில் சோம்பல் உடையானைக் கொண்டு செய்வித்தல் ஆகாது. பொருள் உதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்ள வேண்டும். நமக்காக நம் செயலைச் செய்பவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன போன்ற கருத்துகளையும் கூறுகிறார் முன்றுறையரையனார்.

  6.5.3 ஊழ்

  தலையெழுத்து, தலைவிதி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அதைத்தான் ஊழ் என்று இலக்கியங்கள் பேசுகின்றன. ஊழிற் பெருவலி யாவுள? (குறள்-380) என்று வள்ளுவர் ஊழைவிட வலிமை படைத்தது இவ்வுலகில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றம் காணப்படுவது ஊழால்தான் என்கிறார் முன்றுறையரையனார்.

  அறிவினை ஊழே அடும்
  (பழ:228)

  என்பது பழமொழி.

  திருக்குறளின் ஊழ் அதிகாரத்தை ஒட்டிய பல கருத்துகளை நாம் பழமொழியில் காணலாம்.

  தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது

  (பழ:231)

  ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்

  (பழ:238)

  (ஆகூழ் = நன்மை ஆக்குகின்ற ஊழ்)

  நன்மை தீமை பற்றிய அறிவுடையவர்கள், ஊழால் செலுத்தப்படும் அம்புகள் தரும் துன்பத்தால் வருந்த மாட்டார். இதுபற்றி வள்ளுவரும்

  ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்

  (620)

  என்கிறார்.

  (உப்பக்கம் = புறமுதுகு; உஞற்றுபவர் = முயற்சி செய்பவர்)

  துன்பமின்றி இடைவிடாது முயற்சி செய்பவர் ஊழையும் வலியிழக்கச் செய்வர் என்ற கருத்து இங்குக் கூறப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 18:55:17(இந்திய நேரம்)