Primary tabs
-
4.2 தொடக்கக் காலச் சமூக நாடகங்கள்
விலாசம் என்று முடியும் தலைப்புகளில் நாடகங்கள் பல இயற்றப்பட்டன. அவற்றில் டம்பாச்சாரி விலாசம், பிரதாப சந்திர விலாசம், ஊதாரிப்பிள்ளை விலாசம் ஆகியன குறிப்பிடத் தக்கன.
விலாசம் என்பது போல நாடகம் என்ற பெயரிலும் நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. காசி விசுவநாத முதலியார் தாசில்தார் நாடகம் (1857), பிரம்ம சமாஜ நாடகம் (1871) முதலான நாடகங்களையும் எழுதியுள்ளார். தாசில்தார் நாடகம் தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை அச்சமின்றி வெளிப்படுத்தியது. ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம ஞான சபையில் ஈடுபாடு கொண்டிருந்த காசி விசுவநாத முதலியார் பிரம்ம சமாஜ நாடகம் என்ற நாடகத்தை எழுதினார். உருவ வழிபாடு மறுப்பு, விதவை மறுமணம், பலகடவுள் மறுப்பு முதலானவற்றை இதில் அவர் வலியுறுத்தினார்.
பம்மல் சம்பந்தனார் தாசிப்பெண் என்ற நாடகத்தை எழுதினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு நாடக ஆசிரியர்கள் நாடு ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்று விரும்பினர்; இறை உணர்வை வளர்க்க விரும்பினர்; மூடநம்பிக்கையைக் குறைக்க விரும்பினர்; மேலைநாட்டு நாகரிகத்தின் தாக்கம் உள்நாட்டுச் சமுதாயத்தில் ஏற்படுத்தும் மாறுதல்களைச் சுட்டிக் காட்ட விரும்பினர்.
சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார் முதல் சமுதாயச் சீர்திருத்த நாடகத்தைப் படைத்தார் எனலாம். அவர் எழுதிய டம்பாச்சாரி விலாசம் (1857) மேடையில் நடிக்கப்பட்டது. பின் (1867) நூலாகவும் வெளிவந்தது. தம் காலத்துச் சமூக நிலையை அவர் நாடகமாக்கினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வந்த பணக்காரர் ஒருவரின் மகன், தாசி மோகத்தால் சீரழிந்துபோன வரலாற்றை ஆசிரியர் நாடகமாக எழுதியுள்ளார். அங்கப் பாகுபாடு, கள மாறுதல் இன்றி நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. கூத்து மரபைப் போலக் கட்டியங்காரன் கதையை நடத்துவதாக அவர் எழுதியிருந்தார். நாடகத்தில் பாடல்களும் பழமொழிகளும் நகைச்சுவையும் நிறைய இடம்பெறுகின்றன. பல பாத்திரங்கள் இடம்பெறுகின்றார்கள். இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எழுதப்பட்ட நாளிலிருந்து எண்பது ஆண்டுகள் வரை இந்நாடகம் மேடையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. நாடகத்தைப் பார்த்த பலர் ஆடம்பர வாழ்வையும் பரத்தையர் உறவையும் விட்டுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ப.வ.ராமசாமி ராஜு எழுதிய பிரதாப சந்திர விலாசம் (1877) நாடகமும் தீய நட்பு, குடிப்பழக்கம் முதலானவற்றின் தீமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பிரதாப சந்திரன் என்பவன் ஷோக் சுந்தரம், மத்தாப்பு சுந்தரம் என்பவர்களின் வலையில் விழுகிறான். பின் திருந்துகிறான். மனோன்மணி என்ற நல்ல பெண்ணை மணந்து வாழ்கிறான்.
இந்நாடகத்தில் சென்னையில் வழங்கும் பல்வேறு மொழிகளான தெலுங்கு, உருது முதலான மொழிகளையும் கலந்து உரையாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. பழமொழிகளும் நிறைய இடம் பெற்றுள்ளன. இதில் முதல் காட்சியில் மட்டும் கட்டியங்காரன் வருவதாகக் காட்டப்பட்டுள்ளது. 12 அங்கங்கள், காட்சிப் பிரிவினைகள் என்ற அமைப்பும் உள்ளது. ஆங்கிலப் படிப்பின் நன்மை, சுற்றுலா விவரங்கள் முதலான செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
மரியதாஸ் என்பவர் ஊதாரிப்பிள்ளை விலாசம் (1898) என்ற நாடகத்தினை எழுதியுள்ளார். செல்வன் ஒருவன் தாசியிடம் பொருள் இழந்து இயேசுவின் அருளால் திருந்துவதாகக் கதை அமைப்பு உள்ளது. டம்பாச்சாரி விலாசம் போலவே அமைப்புடைய நாடகம் இது.
சமூக நாடகங்களுக்கு இருந்த வரவேற்பின் காரணமாக அக்காலத்தில் எழுதப்பட்டிருந்த சமூக நாவல்களை நாடகமாக்கினர். கந்தசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு வின் நாவல்களான இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன், ராஜாம்பாள் முதலானவற்றை நாடகமாக்கினார். ராஜேந்திரா நாவல் வரதட்சணைக் கொடுமையைக் கண்டித்தது. வரதட்சணை கொடுக்க முடியாத பெண் அதற்காக விபசாரத்தில் ஈடுபட்டுப் பணம் சேர்க்கிறாள். பின் கணவனுடன் சேர்கிறாள். கணவனும் தன் வாடிக்கையாளர்களில் ஒருவன் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். சந்திரகாந்தா, திருக்கல்லூர் பண்டாரசந்நிதியின் போலித்தனத்தையும், சமூக விரோதச் செயலையும் எடுத்துக்காட்டுகிறது. ராஜாம்பாள், முதியவரை மணந்து கொண்டு துன்புறும் இளம்பெண் பற்றியது. இதில் குழந்தை மணம் கூடாது என்பது அறிவிக்கப்பட்டது. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா நாவலையும் கந்தசாமி முதலியார் நாடகமாக்கினார்.
வே.சாமிநாத சர்மா தாகூரின் நாவலை ஜீவபாலன் என்று நாடகமாக்கினார். இது விலங்குகளைப் பலியிடுதலைக் கண்டிக்கிறது.