தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10246-6.5 அமைப்பு

  • 6.5 அமைப்பு

    தொலைக்காட்சி நாடகம் கதைக்கரு, திரைக்கதை, செய்தி தரும் உத்திகள், உரையாடல், நடிப்பு, அரங்கம் முதலான கூறுகளால் அமைகிறது.

    6.5.1 நாடகக் கதைக்கரு

    அரசு தொலைக்காட்சியில் அதன் கொள்கைகளுக்கு முரண்படாத கருக்களையும் கொள்கையைப் பரப்பும் கருக்களையும் நாடகமாக்குகிறார்கள். சாதி வேறுபாடு, சமய வேறுபாடு, வன் முறையைத் தூண்டுதல், ஆபாசத் தன்மை முதலானவற்றைக் கொண்ட கருக்களைத் தொலைக்காட்சி நாடகம் ஆக்குவதில்லை. பெரும்பாலும் பொழுதுபோக்குத் தன்மை கொண்ட குடும்பக் கதைகளையே நாடகமாக்குகிறார்கள்.

    அந்தந்த நேரங்களில் வரவேற்புப் பெறுகிற கதைக் கருக்களுக்கு முதன்மை தரப்படுகிறது. பெண்கள் பிரச்சினை, இளைஞர்கள் பிரச்சினை, குற்றங்கள், காதல், நகைச்சுவை முதலானவற்றை மையமிட்ட கதைகள் அதிக வரவேற்புப் பெறுகின்றன. இவற்றை அவர்கள் ‘லேடீஸ் சப்ஜெக்ட்’, ‘யூத் சப்ஜெக்ட்’, ‘கிரைம் சப்ஜெக்ட்’, ‘லவ் சப்ஜெக்ட்’ ‘காமெடி சப்ஜெக்ட்’ என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதை ‘நாட்’ அல்லது ‘தாட்’ என்று அழைக்கிறார்கள். இதைத் துணைக் கதைகளுடனும் நிகழ்ச்சிகளுடனும் பாத்திரங்களுடனும் வளர்த்தெடுக்கிறார்கள்.

    6.5.2 திரைக்கதை

    திரைக்கதை என்பது கதையைத் திரையில் காட்டுவதற்குரிய காட்சிகளாக வடிவப்படுத்துவது; வசனம், வர்ணனை, ஒலிக்குறிப்புகள், முதலானவற்றைப் பயன்படுத்திக் காட்சிகள் அமைத்துக் கட்டுக்கோப்பாகக் கதை சொல்லும் முறை. கருத்தாகச் சொல்லாமல் வெளிப்புறத்தையும் செயல்களையும் வருணித்தால் அது திரைக்கதையாகிறது. எடுத்துக்காட்டாகக் கருத்து எது என்பதையும் திரைக்கதை எது என்பதையும் பார்ப்போம்.

    கருத்து : “மனோகர் ரொம்ப சோம்பேறி. எதிலுமே அக்கறை ஒழுங்கு இல்லாதவன். திட்டமிட்டபடி எதையும் செய்ய மாட்டான்”

    திரைக்கதை : “மனோகர் தன் சட்டையைக் கழற்றிப் படுக்கையில் எறிகிறான். பேப்பர் குவியலுக்கிடையே தேடி டூத்பிரஷ்ஷை எடுக்கிறான்”.

    திரைக்கதையாகச் சொல்லப்பட்டிருப்பதில் கருத்து இல்லை. செயல் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. இப்படிக் காட்சி வடிவமாகக் கதை சொல்வதுதான் திரைக்கதை என்பது. செயல்தான் முக்கியம். உரையாடல் அதற்கு உதவினால் போதுமானது.

    எந்தத் திரைக்கதையையும் சம நிலை, கலைந்த நிலை, போராட்ட நிலை, சமரச நிலை என்ற நான்கு கூறுகளாக அமைத்துக் கொள்வார்கள். ஒரு மனிதனின் தேவை அல்லது இலட்சியத்தைக் காட்டுதல், அதற்கு ஒரு தடை வருவதைக் காட்டுதல், தடையை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுதல், இலட்சியத்தை அடைவதைக் காட்டுதல் என இக்கூறுகளை விளக்கலாம். தேவை அல்லது இலட்சியம் என்பது நீதியை நிலைநாட்டுதலாகவோ, குடும்பத்தைச் சீர்தூக்குதலாகவோ, பணக்காரனாவதாகவோ, காதலில் வெற்றியடைவதாகவோ இருக்கலாம். இதில் வரும் தடைகள் அல்லது இடைஞ்சல்களைப் பலவகைகளில் அமைக்கலாம். போராடும் முறையையும் பலவகைகளில் காட்டலாம். தீர்வு வெற்றியாகவோ தோல்வியாகவோ காட்டப்படலாம்.

    முதல் பகுதியில் கதைமாந்தர் யார், கதை எதைப்பற்றியது, கதையை நடத்தப்போகும் இலட்சியம் என்ன என்பவை காட்டப்பட வேண்டும். தடைகளைக் காட்டுவதிலும் போராட்டத்தைக் காட்டுவதிலும் புதுமையைப் புகுத்துவது வெற்றி தரும்.

    தொலைக்காட்சி நாடகத் திரைக்கதைகளில் கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லை. பஞ்சு திணிப்பது போல நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் திணித்துக் கொண்டே போகிறார்கள். கதை முடிவது போல வருவதை முடிய விடாமல் வளர்க்கிறார்கள். திடீரென்று முடிக்கிறார்கள். கதை வளர்ச்சி என்பது சீரானதாக இருப்பதே இல்லை. அண்மையில் ஒளிபரப்பான தொடர்களில் அண்ணாமலை, மெட்டிஒலி முதலான தொடர்கள் இவ்வாறு ஆண்டுக் கணக்கில் வளர்க்கப்பட்டதை நாம் உணர முடியும். தொடரில் சில நாட்கள் பார்க்காமல் விட்டுவிட்டால் கூடக் கதை புரியக்கூடிய நிலையிலேயே இத்தொடர்கள் இறுக்கமின்றி அமைந்துள்ளன.

    6.5.3 செய்தியைத் தரும் உத்திகள்

    தொலைக்காட்சி நாடகத்தில் பெரும்பாலும் காட்சி வடிவில் செய்திகளைச் சொல்ல வேண்டும். ஒருவன் ஓடி வருவதாக வைத்துக் கொள்வோம். வானொலி நாடகத்தில் “ஏன் இப்படித் தலைதெறிக்க ஓடி வர்ரீங்க” என்று கேட்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சியில் ஓடி வருகிற காட்சியைக் காட்டி, அவனிடம் ‘என்ன ஆச்சு’ என்று மட்டும் கேட்டால் போதும். ஆகவே காட்சிகளால் பேசவைப்பதே சிறந்த தொலைக்காட்சி நாடகத்திற்கு அடையாளம். ஆனால் இதற்கு மாறாகவே தொலைக்காட்சித் தொடர்கள் அமைந்திருக்கின்றன. காட்சிகளில் தேவைக்கு அதிகமான விரிவான உரையாடல்கள் இடம் பெறுகின்றன.

    பாலுமகேந்திரா போன்ற சில இயக்குநர்கள் தயாரிக்கும் சில நாடகங்களில் (தனி நாடகங்கள்) காட்சித் தன்மைக்கு முதன்மை இடம் தரப்பட்டு, அளவான, கூர்மையான உரையாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதையும் காண்கிறோம்.

    மேடை நாடகத்தில் ஓர் அறையைக் காட்டுகையில் அறைமுழுவதையுமே அமைத்துக் காட்ட வேண்டும். தொலைக்காட்சியில் அண்மைக் காட்சி மூலம் அறையின் ஒரு பகுதியைக் காட்டினால் போதும்.

    மேடை நாடகத்தில் ஒருவன் நெற்றியைச் சுருக்குவதைக் காட்ட முடியாது. விளக்கை ஏற்றியும் அணைத்தும்தான் உணர்வைக் காட்ட முடியும். தொலைக்காட்சியில் அண்மைக் காட்சி மூலம் நெற்றியைச் சுருக்குவதைக் காட்ட முடியும்.

    ஒரு பெரிய வீட்டைச் சேய்மைக் காட்சி மூலம் வெளியிலிருந்து காட்டினால் பணக்காரன் என்ற செய்தியை உணர்த்திவிட முடியும்.

    அடுத்த நாள், அடுத்த ஆண்டு, அடுத்த பத்தாண்டுகள் என்று மேடை நாடகத்தில் கால மாற்றத்தை உடனடியாகக் காட்டுவது கடினம். ஆனால் தொலைக்காட்சியில் அது எளிது. காட்சியை மற்றொரு காட்சியாக மாற்றும் உத்தி மூலம் அதைச் செய்ய முடியும். சில சமயம் ‘10 ஆண்டுகளுக்குப்பின்’ என எழுத்து மூலம் காட்டுவதும் உண்டு.

    ஒளிப்பதிவுக் கருவி மூலம் பல கோணங்களையும் அசைவுகளையும் காட்டிச் செய்தி சொல்ல முடியும். படத்தொகுப்பு (editing), பின்னணி ஒலியின் மூலமும் பல செய்திகளைச் சொல்ல முடியும். ஒளிப்பதிவுக் கருவியின் மூலமும் பல செய்திகளைச் சொல்ல முடியும். வரைபடம் (Cartoon)கணினி வரைகலை (Graphics) முதலானவற்றின் மூலம் பல செய்திகளைச் சொல்ல முடியும்.

    6.5.4 உரையாடல்

    தொலைக்காட்சி நாடகத்தில் உரையாடல் என்பது ஒரு கூறுதான். காட்சி மூலம் புலப்படுத்துவதுதான் முதன்மையானது. காட்சிக்கேற்ற சொற்கள் இடம் பெற்றால் போதும்.

    சொற்சிக்கனம்

    எடுத்துக்காட்டாக ஒரு காட்சியில் உரையாடலின் பங்கைப் பார்ப்போம். தேனிலவுக்காகக் கணவனும் மனைவியும் காரில் போகிறார்கள். வழியில் கடையில் குளிர்பானம் குடிக்கிறார்கள். அவர்கள் முன்னால் காலியான புட்டிகள் இருக்கின்றன. திடீரென்று கணவன் மனைவியைக் காரில் ஏறச் சொல்லி விரைந்து ஓட்டுகிறான். மனைவி, ‘குளிர்பானத்திற்குக் காசு கொடுத்தீர்களா?’ என்று கேட்கிறாள். அவன், "ஆமா ! கவனிக்கவில்லையா?" என்கிறான். மனைவி கடையைத் திரும்பிப் பார்க்கிறாள். கடைக்காரன் கடைக்கு வெளியே வந்து கையை நீட்டி ஏதோ கத்துவது கண்ணில் படுகிறது. மனைவி சிந்தனை வயப்பட்டவளாகக் கணவனைப் பார்க்கிறாள். இக்காட்சியில் உரையாடலில் சொல்லப்பட்டது மிகவும் குறைவு. காட்சியாகவே செய்தி சொல்லப்படுகிறது. உரையாடல் சிக்கனமாக இருப்பதே சிறப்பு.

    ஏற்ற உரையாடல்

    பொதுவாக உரையாடல் சூழ்நிலைக்கும் பாத்திரங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும். பார்வையாளர்களின் அனுதாபத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு முதலான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். பார்வையாளர்களுக்குப் புரியக் கூடியதாக இருக்க வேண்டும்.

    நாடக உரையாடல்களில் உபமான உபமேயங்களைத் தவிர்க்க வேண்டும். மீனைப்போலக் கண், மானைப்போல அஞ்சுகிறாள் என்று எழுதக் கூடாது. நடிகர்கள் மனப்பாடம் செய்ய ஏற்றவையாக இருக்க வேண்டும். பேச்சு வழக்கை ஒட்டியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு நாடக உரையாடலைக் காணலாம். ரகு என்பவரின் பக்கத்து வீட்டுப்பையன் கடிதம் ஒன்றைக் கொண்டு வருகிறான். அக்கடிதம் ரகுவின் தங்கை ராதிகாவிற்கு வந்தது.

    பையன்

    :
    ரகு அங்கிள். ராதிகா சிஸ்டர் இல்லையா?

    ரகு

    :
    இருக்காளே. உள்ளேதான் இருக்கா.

    பையன்

    :
    நீங்க ரெண்டுபேரும் வெளியே போயிருந்தப்போ இந்த லட்டர் வந்துச்சு. இந்தாங்க.

    ரகு

    :
    ராதிகா !

    ராதிகா

    :
    வர்ரண்ணா !

    (கடிதத்தை வாங்குகிறாள்)

    ரகு

    :
    யார்ம்மா !

    ராதிகா

    :
    வேற யார் இவர்தான்

    மேற்கண்ட உரையாடலில் நகர்ப்புறத்தில் காணப்படும் மொழிக்கலப்பு இருக்கிறது. பேச்சு வழக்கை ஒட்டி அமைவதால் இவ்வாறு உள்ளது. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு முதலான இரண்டும் கலந்ததாக இருக்கிறது. சுருக்கமாக உள்ளது.

    உரையாடலின் நிலை

    உரையாடல்கள், பாத்திரங்களின் பண்பு, தேவை, விருப்பு வெறுப்பு மனநிலை ஆகியவற்றைக் ‘கூர்மை’யாகக் காட்ட வேண்டும். ஆனால் பொதுவாக இன்றைய தொலைக்காட்சி நாடக உரையாடல்களில் கூர்மை இல்லை. காட்சி மூலம் காட்ட வேண்டிய இடங்களில் கூட உரையாடல்களே இடம் பெறுகின்றன. சில உரையாடல்கள் சுற்றி வளைத்துப் பேசப்படுகிற உரையாடல்களாக உள்ளன. இரண்டு மூன்று பாத்திரங்கள் நேரிலோ தொலைபேசியிலோ நின்று கொண்டோ அமர்ந்து கொண்டோ பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வானொலியின் தாக்கத்திலிருந்து தொலைக்காட்சி விடுபடவில்லை என்பதையே இது காட்டுகிறது. செய்தி வாசிப்பு போலவே நாடகக் கதை, பாத்திரங்களால் உரையாடல் மூலம் நடத்தப்படுகிறது.

    6.5.5 நடிப்பு

    நடிப்பு ஆற்றல் மிக்கவர்களைத் தேர்ந்தெடுத்துத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வைக்கிறார்கள். நாடக நடிகர்களும் திரைப்பட நடிகர்களும் தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கிறார்கள். தொலைக்காட்சி நடிகர்களாக அறிமுகமாகி நடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    அரசு தொலைக்காட்சி

    தூர்தர்ஷனில் நடிகர்களைத் தேர்வுசெய்து மூன்று தரத்தினராகப் பிரித்துப் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். பட்டியலில் இல்லாத திறமையான நடிகர்களும் பயன்படுத்தப் படுகிறார்கள். நடிகர்களை ‘பி’, ‘பிபிளஸ்’, ‘ஏ’, ‘ஏபிளஸ்’, ‘சூப்பர்’ என்று தரம் பிரிக்கிறார்கள். தொடக்கத்தில் மேடை நாடகங்களை அப்படியே படம்பிடித்து ஒளிபரப்பியதால் மேடை நாடக நடிகர்கள் நிறையப்பேர் இடம் பெற்றார்கள். எஸ்.வி. சகஸ்ரநாமம், ஆர்.எஸ். மனோகர், சோ, எஸ்.வி. சேகர், மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டன. திரைப்படத்தில் சாதனை புரிந்த நடிகர்களையும் அழைத்து நடிக்கச் செய்தார்கள்.

    தனியார் தொலைக்காட்சி

    தனியார் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரதாரர்களும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்களும் நாடகத்தைத் தயாரித்த காரணத்தால் ‘சின்னத்திரை நடிகர்கள்’ என்ற வகையினராகவே பலர் உருவாகியிருக்கிறார்கள். திரைப்படங்களில் வாய்ப்புத் தேடுபவர்களும், வாய்ப்பைத் தவறவிட்டவர்களும், திரைத்துறையால் ஒதுக்கப்பட்டவர்களும், புகழ்விரும்பிகளும் தொலைக்காட்சி நாடக நடிகர்களாக ஆகியிருக்கிறார்கள்.

    திரைத்துறையில் போலச் சின்னத்திரையிலும் நடிகர்கள் உருவாகிப் பெயர் பெற்றிருக்கிறார்கள். சின்ன வகைப் பாத்திரத்திற்குச் சின்ன நடிகர் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

    நடிப்பின் நிலை

    இன்றைய தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பைவிட உரையாடலுக்கே அதிக இடம் இருக்கிறது. இதனால் உரையாடலுக்குத் துணையாக முகபாவங்களைக் காட்டுவது நடிப்பு என்றாகிவிட்டது. மேலும் நல்லவர் தீயவர் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துப் பாத்திரங்களை மோத விடுவதால் நடிப்புக் களம் என்பது சுருங்கியதாக ஆகிவிடுகிறது. அளவுக்கு மீறி நல்லவர்களாகவும் அளவுக்கு மீறித் தீயவர்களாகவும் காட்டும் மிகை உணர்ச்சி காரணமாக மிகை நடிப்பும் கையாளப்படுகிறது. கண்களை உருட்டுதல், பற்களைக் கடித்தல், அடித்தல் போன்ற நடிப்புகளும், கண்ணீர் விடுதல், ஏங்குதல், நம்பி மோசம் போனதைக் காட்டுதல் போன்ற நடிப்புகளும் மட்டுமே காட்டப்படுகின்றன.

    6.5.6 அரங்கம்

    நாடகம் நிகழும் களம் அல்லது களங்களைக் காட்டுவது அரங்கம். தொலைக்காட்சி நாடகங்களில் அரங்க அமைப்புப் பற்றிக் காணலாம்.

    அரசு தொலைக்காட்சி

    அரசு தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பில் தொடக்கத்தில் அரங்க அமைப்பிற்கு மிகுதியான அக்கறை காட்டப்பட்டது. மேடை நாடகங்களுக்கு அரங்கம் அமைப்பது போலவே தொலைக்காட்சி நாடகங்களுக்கும் அமைத்தனர். அரங்க வடிவமைப்பாளர் அரங்கத்தை வடிவமைத்துக் கொடுப்பார். தச்சர்கள் தள உதவியாளர்கள், வண்ணம் தீட்டுவோர் முதலானோர் அரங்கத்தை உருவாக்குவார்கள். அரங்கத்தில் வைக்க வேண்டிய தட்டுமுட்டுப் பொருள்களை உதவியாளர்கள் வைக்கிறார்கள். பாத்திரங்கள் எங்கெங்கு எத்திசையை நோக்கி நிற்க வேண்டும் என்பதையெல்லாம் அரங்கத் தரையில் குறியிட்டு அடையாளம் காட்டுவார்கள். அதற்கேற்ப ஒலி ஒளி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

    வளர்ச்சி

    தொடக்கத்தில் எல்லாக் காட்சிகளையுமே இவ்வாறு வடிவமைத்தார்கள். கடல்அலைகள் மோதும் காட்சியைக் கூட வடிவமைத்தார்கள். பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் நடிகர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று பதிவு செய்கிறார்கள். இயற்கைச் சூழலில் படம் எடுக்கிறார்கள். காட்சிக்கு ஏற்றாற்போல் வீடுகள் வெளி இடங்கள் முதலானவற்றில் படம் எடுக்கிறார்கள். தனியே சில வெளிப்புறக் காட்சிகளை எடுத்துவந்து தேவையான இடங்களில் இணைக்கிறார்கள்.

    அரங்கின் தேவை

    தொலைக்காட்சித் திரை சிறியது என்பதால் அரங்கங்களை மிக நுணுக்கமாகவும் பெரியதாகவும் அமைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரங்கங்களிலேயே முடிந்து விடுகின்றன. எனவே அரங்க அமைப்பிற்கு மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய தேவை இல்லை. அதிலும் தற்கால நிகழ்வுகளைக் கொண்ட நாடகங்களுக்கு அரங்கத் தேவையென்பது முக்கியமானதல்ல. பழைய கால நிகழ்வுகளைக் கொண்ட நாடகங்களுக்கே அரங்கம் தேவைப்படுகிறது.

    பெரும்பாலும் அண்மைக் காட்சிகளே இடம்பெறுவதால் பின்புலத்திற்கு அதிகத் தேவை இல்லை. அதிலும் மனித பிம்பங்களே அண்மைக் காட்சியில் காட்டப் படுகின்றன. எனவே விரிவான பெரிய நுணுக்கமாக அரங்க அமைப்பிற்கு அவசியம் இல்லை. மேலும் திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பயன்படும் வகையில் வீடுகளை வடிவமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். பல தொடர்களிலும் சில வீடுகள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதைக் காணமுடியும். மருத்துவ மனைகள், கடைகள் முதலானவற்றைக் காட்டும் பொழுது அங்குச் சென்றே ஒளிப்பதிவு செய்கிறார்கள். இது ஒருவகையில் அவற்றின் உரிமையாளர்களுக்கு விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2018 15:41:45(இந்திய நேரம்)