Primary tabs
-
3)அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர் பற்றி எழுதுக.
அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர் காரைக்கால் அம்மையார். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் விரிவாகக் காணலாம். இவருடைய இயற்பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் தனதத்தன் மகளாகப் பிறந்து நாகைப்பட்டினத்தில் பரமதத்தனை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். ஒரு நாள் பரமதத்தனைக் காண வ ந்தவர்கள் அவனுக்கு இரு மாங்கனிகள் அளித்தனர். அப்போது சிவனடியார் ஒருவர் வீட்டுக்கு வர, அவருக்கு அம்மையார் இரு மாங்கனிகளில் ஒன்றை எடுத்து வைத்து அமுது படைத்தார். கணவன் பரமதத்தனுக்கு எஞ்சிய கனியைக் கொடுக்க, அவன் அக்கனியின் இனிமையால் ஈர்ப்புண்டு மற்றொரு கனியையும் கேட்கிறான். அம்மையார் நடுக்குற்று உள்ளே நுழைந்து சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அம்மையார் தம் கரத்தே ஓரினிய மாங்கனியை வரவழைத்துக் கணவனுக்குப் படைத்தார். அக்கனியின் தெவிட்டா இனிப்பு கண்டு இக்கனி ஏதென்று மனைவியை வினவ, அம்மையார் நிகழ்ந்ததை உரைத்தார். உடனே மேலும் ஒரு கனியை முன்போல் வரவழைக்கச் சொல்ல, அம்மையார் சிவனை நினைந்து உள்ளமுருகி வேண்ட, அவனருளால் ஓர் அழகிய மாங்கனி அவர் கரத்தில் விழவும் அதை அவள் கணவனிடம் சேர்த்தாள். அவன் அதிசயித்து அக்கனியை எடுக்க முயன்ற போது அது மறைந்தது. இந்நிகழ்ச்சி கண்ட பரமதத்தன் இவள் மானிடப் பெண் அல்லள், தெய்வம். இவளுடன் வாழ்தல் தவறு என்று அவளை விட்டு நீங்கினான். பாண்டிநாடு சென்று அங்கே ஒரு பெண்ணை மணந்தான். அங்கே பிறந்த தன் மகளுக்குத் தன் முதல் மனைவியின் பெயராகிய புனிதவதி என்ற பெயரைச் சூட்டி அம்மையாரைத் தன் குல தெய்வமாக வழிபட்டு வந்தான்.
பின்னர் அவர்தம் உறவினர் அம்மையாரை அழைத்துக் கொண்டு பாண்டிநாடு சென்ற போது, அவன் மனைவி மகளுடன் சேர்ந்து அம்மையார் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அவன் நிலையுணர்ந்த அம்மையார் ஊனுடலை உதறி என்புடலைத் தாங்கினார். இதனால் அவரைக் காரைக்கால் பேயார் என்றும் குறிப்பிடுவார்கள். அவ்வுடல் கொண்டு தலையால் நடந்து கயிலைமலை சென்றபோது அங்கே அவர் இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டார். பின்னர் இறைவன் கட்டளைப்படி திருவாலங்காடு சென்று ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடிக் கீழிருந்து பெறுதற்கரிய பேறு பெற்றார் என்று பெரியபுராணம் கூறுகிறது.