Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
சமய வழக்குச் சொற்கள் பற்றி விளக்குக.சமய அடிப்படையிலும் தமிழானது தனித்த அடையாளத்துடன் வழக்கிலுள்ளது. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ வேத மறையான விவிலியத்தில் காணப்படும் சமஸ்கிருதம் தழுவிய சொற்கள், இன்றும் கிறிஸ்தவர்களிடையே வழக்கிலுள்ளன. கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக் கூட்டங்களிலும் ஜெபக் கூட்டங்களிலும் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்கள் அவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் இறைவனிடம் அருள் வேண்டி மன்றாடும் பல சொற்கள் இன்று பொதுத் தமிழில் வழக்கிறந்து விட்டன. என்றாலும் அத்தகைய சொற்களுக்கு நிகரான புதிய சொற்களை வழிபாட்டில் பயன்படுத்த அவர்கள் தயாராக இல்லை. விவிலியத்தில் உள்ள சொற்கள் புனிதமாக்கப்பட்டு விட்டன.
இஸ்லாமியர்கள் தொடக்கத்தில் அரபு மொழியின் வழியே இறைவனைத் தொழுது கொண்டிருந்தனர். அண்மைக் காலமாகத் தமிழிலும் வழிபாடு நடத்துகின்றனர். அதற்குத் துணையாக குரானைத் தமிழாக்கியுள்ளனர். எனினும் அரபு மொழியிலுள்ள முக்கியமான சொற்களைத் தமிழுடன் கலந்து தொழுகின்றனர். அரபுச் சொற்களை இயல்பாகக் கலந்து பேசுகின்றனர். இஸ்லாம் கிறித்தவ சமயத்தினர் சமய அடிப்படையில் அவர்களுக்கெனத் தனித்துப் பயன்படுத்தும் சொற்கள் இன்னம் தொகுக்கப்படாமலே உள்ளன. இத்தகைய சொற்கள் சேகரிக்கப்படும்போது, அவை சொல் மூலங்களாக விளங்கும்.