Primary tabs
உலா என்னும் சிற்றிலக்கியம் பாட்டுடைத்தலைவன் உலா
வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிர்
காதல் கொண்டு மயங்கி நிற்பர். இது பரத்தையர் இயல்பு;
குலமகளிர் இயல்பன்று. கலிவெண்பாவில் இதனைப் பாடுவர்.
ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப என்ற
தொல்காப்பியச்
சூத்திரமே இதற்கு அடிப்படை. இந்த
அடிப்படை, முதலில்
காப்பியங்களில் ஒரு கூறாகி, பின்னாளில்
தனி இலக்கியமாகவே
உருவெடுத்தது. பாட்டுடைத் தலைவன்
பவனியே பெரிதும்
சிறப்பிக்கப்படுவதால் உலா என்று பெயர்
பெற்றது.
வழக்கொடு சிவணிய வகைமை யான
எனும் தொல்காப்பிய நூற்பா உலாவின் தோற்ற நிலை என்பர்.
பெருங்காப்பியங்களில் பாட்டுடைத்தலைவன் உலா வருதல்
சுருக்கமாகக் கூறப்படும். இதனை மட்டுமே உயிர்நாடியாகக்
கொண்டு தெய்வமே உலா வருவதாகவும், அவ்வுலாக் கண்டு
உவகை கொண்ட பல திறப் பெண்கள் காமுற்றதாகவும்
கலிவெண்பாவில் பாடப்படுவது உலா இலக்கியம். இதனை
உலாப்புறம் என்றும் கூறுவர்.
ஆதி உலா, தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்பெறும்
சேரமான் பெருமாள் நாயனார் செய்த திருக்கைலாய ஞான
உலாவே முதல் உலாவாகும். இறைவன் பெருமை பேசும் உலா
என்ற முறையில் தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்படுகிறது.
சிறந்த ஓசை நயமும் கருத்தாழமும் கொண்ட இவ்வுலா பன்னிரு
திருமுறைகளில் பதினொராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இதன் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. சிவபெருமானின்
பெருமையும் இறைவியின் அழகும் வீதிகளின் சிறப்பும் அழகிய
வர்ணனைகளோடு அமைந்து கற்போரை மகிழ்விக்கிறது.
அடுத்து வருவது நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையாகும். இது
திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு
அமைகின்றது. 12ஆம் நூற்றாண்டில் உலாப்பாடுவதில்
வல்லவரான ஒட்டக்கூத்தரால் மூவருலா இயற்றப்பட்டது.
விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன், இராசராச சோழன்
ஆகிய மூன்று சோழ மன்னர்களையும் தலைவர்களாகக்கொண்டு
தனித்தனியாகப் பாடப்பெற்ற உலா நூல்கள் மூன்றையும்
இணைத்து மூவருலா என்பர். இம்மூன்று மன்னர்கள் காலத்திலும்
வாழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். தமிழக வரலாற்றை அறிய இந்நூல்
பெரிதும் பயன்படுகின்றது. விசயாலய சோழனுக்கு 96
விழுப்புண்கள் ஏற்பட்ட செய்தியும் முதலாம் இராசராசனின்
வெற்றியும், கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம்
இராசேந்திரனின் வெற்றியும் பற்றி ஒட்டக்கூத்தர் தன் உலா
நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
நம்பியாண்டார் நம்பிகளின் ஆளுடைய பிள்ளையார்
திருவுலாமாலை, இரட்டைப்புலவர்களின் ஏகாம்பர நாதர்
உலா, அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலா,
திருக்கழுக்குன்றத்து உலா, திரிகூட ராசப்பக்கவிராயரின்
திருக்குற்றால நாதர் உலா, தத்துவராயரின் சொக்கநாதர்
உலா, கந்தசாமிப்புலவரின் திருப்பூவணநாதருலா,
திருக்காளத்தி நாதருலா முதலியவை பின்னாளில்
தோன்றியவை. இக்காலத்தில் தோன்றியவை தமிழன் உலா,
காமராசர் உலா போன்ற உலா இலக்கியங்கள் ஆகும்.
உலாச் செய்திகள் கண்ணிகளால் அமைந்தவை. கண்ணி
என்பது இரண்டு கண்போல் இணைந்த இரண்டு வரிகளால்
அமைவது. உலா இலக்கியத்தின் முற்பகுதியில் உலாவரும்
பாட்டுடைத் தலைவனது குலம், குடிப்பிறப்பு, மரபு, அழகு,
கொடை, அணி அணியும் முறை, அறிவு, ஆண்மை, அன்பு,
நகர வரவேற்பு, களிறு ஊர்தல் ஆகியன கூறப்பெறும்.
தலைவன் சிறப்புக் கூறுங்கால் பத்து வகைச் சிறப்புகள்
எடுத்துரைக்கப்படும். இதனைத் தசாங்கம் என்பர். பிற்பகுதியில்
அவனைக் கண்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை,
அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு வகைப் பருவ
மகளிரின் (பொதுமகளிர்) அழகும், பண்பும்,காதலும், மயங்கும்
முறையும் எடுத்துரைக்கப்படும். இதில் புலவர் திறம் பளிச்சிடும்
இடம் பெதும்பை மகளிர் நிலை பற்றிப் பாடுவதாகும்.
இதனாலேயே ‘பேசுமுலாவிற் பெதும்பை புலி’ எனப்
பகரப்படுகிறது.
நச்சினார்க்கினியர், உலா இலக்கியத்தில் வரும் காதல்
மகளிர் பரத்தையரே; குலமகளிர் அல்லர் என்பர்.
பெருங்கதையும் உலா பற்றிக் கூறுமிடத்தில் உத்தம மகளிர்
ஒழிய எனக் கூறிக் குல மகளிரை நீக்கும். பேராசிரியர்
உரையும் தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக்
கூறப்படாது எனக் கூறும்.
கடவுள், அரசன், வள்ளல், தலைவன் ஆகியோரைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடும் மரபினை உலா
இலக்கியத்தில் காணலாம். ஒரு நாளில் ஓர் ஊர்தியில் ஒரு
தலைவன் வர, ஏழு பருவப் பெண்கள் இதயம் நெகிழ்வது
இலக்கணமாக இருக்க, ஒரு தலைவன் ஏழு நாட்களில் ஏழுவித
ஊர்திகளில் வர, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவ மகளிர்
காமுறுவதாகக் கூறும் கற்பனையை மதுரைச் சொக்கநாதர்
உலாவில் காணலாம்.
விக்கிரம சோழன் உலாவைப் பாடியவர்
ஒட்டக்கூத்தர். இவர் சோழ நாட்டில் ‘மலரி’ என்ற ஊரில்
செங்குந்த மரபில் தோன்றியவர். இவர் விக்கிரம சோழன்
அவைக்களப் புலவராக இருந்தவர். பின்பு அவன் மைந்தன்
குலோத்துங்கனுக்குத் தமிழ்க் கல்வி பயிற்றும் குருவாகவும்
அவைக்களப் புலவராகவும் இருந்தவர். பின்னர்
அக்குலோத்துங்கன் மைந்தன் இரண்டாம் இராசராசனுக்கும்
அவைக்களப்புலவராக இருந்துள்ளார். அவைக்களப்
புலவர்களுள் சிறப்பு வாய்ந்த தலைமைப்புலவராக
விளங்கியுள்ளார். கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி,
காளக்கவி, கௌடப் புலவர் என்பன ஒட்டக்கூத்தரின்
பட்டப்பெயர்களாம்.
ஒட்டக்கூத்தர் பெற்ற பரிசுகள் பல, சோழமன்னர்களுள்
ஒருவன் அரிசிலாற்றங்கரைக்கண் ஓர் ஊரைப் பரிசிலாக
அளித்தனன். அது கூத்தனூர் என்று பேர் பெற்று இன்றளவும்
உள்ளது. இராசராச சோழன் உலாவைப் பாடி அரங்கேற்றிய
பொழுது இரண்டாம் இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும்
ஓராயிரம் பொன் பரிசில் வழங்கினான் எனத் தெரிகிறது.
ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட வேறு நூல்கள்
அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, காங்கேயன்
நாலாயிரக்கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்,
தக்கயாகப்பரணி என்பன. ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று
உலா நூல்களும் மூவருலா என்று அழைக்கப்படுகிறது.
அவற்றுள் முன் நிற்பது விக்கிரம சோழன் உலா. அடுத்தது
குலோத்துங்க சோழன் உலா. மூன்றாவது இராசராச சோழன்
உலா. இம்மூன்று மன்னர்களும் அரசு புரிந்த காலமே
ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலமாகும். விக்கிரமசோழன் கி.பி. 1118
முதலும், இரண்டாம் இராசராசசோழன் 1146 முதலும் ஆட்சி
புரிந்துள்ளனர். எனவே 12ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரையும் வாழ்ந்தவர்
ஒட்டக்கூத்தர் என அறியலாம்.