தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விக்கிரம சோழன் சிறப்புகள்


    சூரிய குலத்திலே தோன்றிய புகழ் பெற்ற சோழ மன்னன்
விக்கிரம சோழன். மனுநீதிச் சோழன், கிள்ளி வளவன்,
கரிகாற்சோழன், 96    விழுப்புண்களை ஏற்ற விசயாலயன்,
முதற்பராந்தகன், மலைநாடு கொண்ட முதல் இராசராசன், கங்கை
கொண்ட இராசேந்திரன் என்ற    புகழ் பெற்ற சோழர்
பரம்பரையில் வந்தவன் இந்த விக்கிரமசோழன். பாண்டியர்,
சேரர் ஆகிய பகைவரைத் தொலைத்துப் புகழ்பெற்ற    ஆட்சி
புரிந்த முதற்குலோத்துங்கனுக்கு மகனாகப் பிறந்த மன்னன்
இந்த விக்கிரமசோழன்.

    இவன்    ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட
சோழபுரமே சோழநாட்டின்    தலைநகராய் அமைந்திருந்தது.
இவனது ஒப்பற்ற செங்கோல் எட்டுத்திசையையும் அளக்கிறது.
இவனுடைய வெண்கொற்றக் குடை எட்டுத் திசைகளுக்கும் நிழல்
செய்கின்றது. வேற்றரசர்கள் தங்கள் மகுடங்களை இறக்கி வைத்து
இவன் பாதங்களைப் பணிகின்றனர்.

மாடப் புகாருக்கும் வஞ்சிக்கும் காஞ்சிக்கும்
கூடற்கும் கோழிக்குங் கோமானே-பாடலர்
சாருந் திகிரி தனையுருட்டி ஓரேழு
பாரும் புரக்கும் பகலவனே-சோர்வின்றிக்
காத்துக் குடையொன்றால் எட்டுத் திசைகவித்த
வேத்துக் குலகிரியின் மேருவே-போர்த்தொழிலால்
ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே
(655-662)

என்று விக்கிரம சோழனைச் சிறப்பிக்கிறார் ஒட்டக்கூத்தர்.


3.3.1 ஆட்சிச்சிறப்பு


    இம்மன்னன் பெருமைக்காக முடி சூட்டிக்கொள்ளவில்லை.
இவ்வுலகைக் காக்கவே முடிசூட்டி ஆட்சி புரிந்தான் எனும்
கருத்தில்,

மூன்று முரசு முகில்முழங்க-நோன்றலைய
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்து
(56-57)

என்கிறார் ஒட்டக்கூத்தர்.

     நீர் நிறைந்த ஏழுகடல்களும் நிலத்தில் உள்ள ஏழு
தீவுகளும் பொதுவென்று சொல்வதை நீக்கி, தன்னுடைய
போர்க்குரிய சக்கரத்தால் வென்று தனக்கே உரிமையாக்கிக்
கொண்டவன். வட்ட வட்டமாகச் சூழ்ந்திருக்கும் ஏழு தீவுகள்
இறலி, சூசை, கிரவுஞ்சம், சம்பு, புட்கரம், கமுகு, தெங்கு
என்பனவாம்.    ‘உலகமேழுடைய    பெண்ணணங்கு, பெண்
சக்கரவர்த்தி’ என்று விக்கிர சோழன் பட்டத்துத் தேவியைக்
குறிப்பிடுகின்றார். இவனுடைய    பட்டத்து யானை தானே
முழங்குவதல்லால் தனக்கெதிராக வானமே முழங்கினாலும்
அவ் வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய
துதிக்கையும் இல்லையெனக்கண்டு சினம் தணியும். ஈழமண்டலம்,
சேரமண்டலம், மாளுவநாடு    இவற்றையெல்லாம் வென்று
ஆள்பவன் விக்கிரம சோழன். மன்னர் பலர் வந்து அவன்
பாதத்தில் வணங்கும்போது அவர் முடிமேற்பட்டுக் கழல்
ஒலிப்பதால்.

     முடிமேல் ஆர்க்கும் கழற்கால்

என்கிறார் ஒட்டக்கூத்தர்.


3.3.2 கொடைச்சிறப்பும் கோயிற்பணிகளும்

    பார் புகழும் மன்னனாக விளங்கும் விக்கிரம சோழன்
நாள்தோறும் எண்ணற்ற தானங்களைச் செய்தான். அன்னம்,
ஆடை, பொன், பூமி, பசு முதலியவற்றை உயர்ந்தோர்க்குக்
கொடுப்பது தானம்.    இவை    முறையே அன்னதானம்,
வஸ்திரதானம், சொர்ண தானம், பூதானம், கோதானம் என
வடமொழியில் கூறப்படும். நீராடிக் கடவுட் பூசை முடித்தபின்
ஏழைகளுக்கு அன்னம், ஆடை    முதலியன வழங்கினான்.
மிக்குயர்ந்த தானத்துறை முடித்து வந்தான் என்கிறார்
ஒட்டக்கூத்தர்.

கூத்தப்பெருமானையே குலதெய்வமாகக் கொண்டவன் இவன்.
வருவாயில் பெரும்பகுதியைத் தில்லைக்கோயில் திருப்பணிச்
செலவிற்கே தந்தனன் எனத் திருமழபாடிக் கல்வெட்டுக்
கூறுகின்றது. பூமகள் புணர பூமாது மிடைந்து என்று தொடங்கும் கல்வெட்டு மெய்க்கீர்த்திகள் இச்செய்தியை நன்கு விளக்குகின்றன. கூத்தப்பெருமான் திருக்கோயில் வெளிச்சுற்று முழுவதும் விக்கிரம சோழன் திருமாளிகை என்றும் திருவீதிகளுள் ஒன்று விக்கிரமசோழன் தென்திருவீதி என்றும் இம்மன்னன் பெயரால் வழங்கப்படுகின்றன. தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோயிற்பணியில் இவன் உள்ளம் பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதை இதனால் உணரமுடிகின்றது.


    புலவரைப்    புரக்கும் பண்பாளனாக விக்கிரமசோழன்
விளங்கியதைக்     காண்கிறோம்.     விக்கிரமசோழன்
ஒட்டக்கூத்தருக்கு ஒரு காலத்தில் விருதுக்கொடியும் சின்னமும்
பரிசிலாக அன்புடன் அளித்தனன். அதனைப் பெற்றபோது
ஒட்டக்கூத்தர், “மிகவும் இழிந்த என் தமிழ்க்கவிக்கு இத்துணைச்
சிறந்த கொடியும் சின்னமும்    வேண்டுமோ?     உயர்ந்த
தெய்வத்தன்மை வாய்ந்த புலவர்க்கு அளிக்கும் பரிசில் அன்றோ;
இப்பரிசிலைப் பெறத் திருஞானசம்பந்தரே    தகுதியுடையவர்
அல்லாது யான் தகுதியுடையேன் அல்லேன்” என்று அடக்கமாகப்
பாடுவதிலிருந்து புலவரைப் புரக்கும் உயர்ந்த பண்பாளனாக
விக்கிரமசோழன் விளங்கியதைக் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:56:48(இந்திய நேரம்)