தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அந்தாதி இலக்கியம்

5.1 அந்தாதி இலக்கியம்


    பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல் போன்ற
இலக்கண நூல்கள் சிற்றிலக்கியங்களுக்கு    இலக்கணம்
வகுக்கின்றன. அந்தத்தை ஆதியாக வைத்துப் பாடுவது
அந்தாதி. முன் பாடப்பட்ட பாடலின் ஈற்றில் உள்ள அடியோ,
சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த செய்யுளின் முதலாக
அமையப் பாடுவது அந்தாதியாகும். அந்தம் (இறுதி) ஆதியாக
(முதலாக) வருவதால் இப்பெயர் பெற்றது.

     தொல்காப்பியர் குறிப்பிடும் இயைபு என்னும் வகையில்
அந்தாதி அடங்கும். யாப்பருங்கலக்காரிகை ‘அந்தம் முதலாத்
தொடுப்பது அந்தாதி’ எனக் குறிப்பிடும். இதற்குரிய யாப்பு
வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையாகும்.

    அந்தாதி    தமிழ்    இலக்கியத்திற்கு    வடமொழியின்
தாக்கத்தால் வந்தது என்பர். இது சரியன்று. அந்தாதி தனி
இலக்கியமாக இல்லாவிடினும் புறநானூற்றில் முரஞ்சியூர்
முடிநாகராயர் பாடிய பாடலில் முதல் ஐந்து வரிகளில் அந்தாதி
அமைப்பினை
க் காண முடிகிறது.

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் -
    (புறம் - 2)

    முதல் வரியின் ஈற்றுச் சொல் ‘நிலன்’ அடுத்த வரியின்
முதற் சொல்லாக வருகிறதல்லவா.    இதுதான் அந்தாதி
எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க
வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியது.
தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார்
பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.

5.1.1 அந்தாதி இலக்கிய வரலாறு
    
     பக்தி இலக்கிய காலமே அந்தாதி பெரிதும் உருவாகிய
காலம் எனலாம். ஏனெனில் பக்திப் பாடல்களை மனப்பாடம்
செய்ய அந்தாதி இலக்கியம் ஏற்றதாக இருந்தது. எனவே தான்
சைவத்தின் 12 திருமுறைகளில் 11-ஆம் திருமுறையில் மட்டும் 8
அந்தாதி நூல்கள் அடங்கியுள்ளன. ஆழ்வார்களில் தலைசிறந்த
நம்மாழ்வாரும் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும்
அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார்.

    குறிப்பிடத்தக்க அந்தாதிகளை இனிக் காண்போம்.

(1)
முதல் திருவந்தாதி
-
பொய்கை ஆழ்வார்
(2)
இரண்டாம் திருவந்தாதி
-
பூதத்தாழ்வார்
(3)
மூன்றாம் திருவந்தாதி
-
பேயாழ்வார்
(4)
சடகோபரந்தாதி
-
கம்பர்
(5)
திருவரங்கத்தந்தாதி
-
பிள்ளைப் பெருமாளையங்கார்
(6)
கந்தரந்தாதி
-
அருணகிரிநாதர்
(7)
திருவருணை அந்தாதி
-
எல்லப்ப நாவலர்
(8)
அபிராமி அந்தாதி
-
அபிராமி பட்டர்
(9)
திருக்குறள் அந்தாதி
-
இராசைக் கவிஞர்

    11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்

(1)
அற்புதத் திருவந்தாதி
-
காரைக்காலம்மையார்
(2)
சிவபெருமான் திருவந்தாதி
-
கபிலதேவ நாயனார்,
(3)
சிவபெருமான் திருவந்தாதி
-
பரணதேவ நாயனார்
(4)
கயிலைபாதி காளத்தி
பாதி அந்தாதி
-
நக்கீர தேவ நாயனார்
(5)
திருவேகம்பமுடையார்
திருஅந்தாதி
-
பட்டினத்தடிகள்
(6)
திருத்தொண்டர் திருஅந்தாதி
-
நம்பியாண்டார் நம்பிகள்
(7)
ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி
-
நம்பியாண்டார் நம்பிகள்
(8)
பொன்வண்ணத்தந்தாதி
-
சேரமான் பெருமாள் நாயனார்

    19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள்
தோன்றின.    வண்ணச்சரபம்    தண்டபாணி    சுவாமிகளும்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக
எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர்.

5.1.2 அற்புதத் திருவந்தாதி

     பெண் பிறவிக்கு வீடுபேறில்லை என்ற கூற்று நிலவிக்
கொண்டிருந்த அந்நாளில் காரைக்காலம்மையார் தமிழ்நாட்டில்
தோன்றி, பேய்க்கோலம் தாங்கி, சிவபிரான் அருள்வழி நின்று
ஒழுகி, வீடுபேறெய்தியவர். பேய்க்கோலம் தாங்கிய பின் அவர்
ஆண்டவனைப் போற்றிய பாக்கள் மூத்த திருப்பதிகம்-1,
மூத்த திருப்பதிகம்-2, திருஇரட்டை மணிமாலை, அற்புதத்
திருவந்தாதி ஆகியவையாம். இந்நான்கு நூல்களும் சைவத்
திருமுறைகள் பன்னிரண்டனுள் 11ஆம் திருமுறையில் வைத்துப்
போற்றப் படுகின்றன. 101 பாடல்களைக் கொண்டது அற்புதத்
திருவந்தாதி. இந்நூல் முதற் பாடலின் இறுதிச் சொல் அடுத்த
பாடலின் முதற் சொல்லாக வருமாறு அந்தாதி முறையில்
அமைக்கப்பட்டது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதியாகிய
இதனை ஆதி அந்தாதி என்பர். இதன் காலம் கி.பி. ஆறாம்
நூற்றாண்டு என்பர். அற்புதத் திருவந்தாதி வெண்பா யாப்பில்
அமைந்துள்ளது.

    இவ்வந்தாதியில் சைவ     நெறியாகிய     சிவபக்தியும்,
முழுமையாகச் சரணடையும்    நிலையும்    சொல்லப்படுகின்றன.
சிவபெருமான் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைமைக்
குணமும் திருவருள் நெறியினர்க்கும், பக்தியாளர்க்கும் பெருவிருந்து
அளிக்கும் சிறப்புடையன எனலாம்.

5.1.3 ஆசிரியர் அறிமுகம்

    அற்புதத்    திருவந்தாதியின்    ஆசிரியர் காரைக்கால்
அம்மையார்
. இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில்
விரிவாகக் காணலாம். இவருடைய இயற்பெயர் புனிதவதி. இவர்
காரைக்காலில் தனதத்தன் மகளாகப் பிறந்து நாகைப்பட்டினத்தில்
பரமதத்தனை மணந்து    இல்லறம் நடத்தி வந்தார். ஒரு நாள்
பரமதத்தனைக் காண வந்தவர்கள் அவனுக்கு இரு மாங்கனிகள்
அளித்தனர் . அப்போது    சிவனடியார் ஒருவர் வீட்டுக்கு வர,
அவருக்கு அம்மையார் இரு மாங்கனிகளில் ஒன்றை எடுத்து
வைத்து அமுது படைத்தார். கணவன் பரமதத்தனுக்கு எஞ்சிய
கனியைக் கொடுக்க அவன், அக்கனியின் இனிமையால் ஈர்ப்புண்டு
மற்றொரு கனியையும் கேட்கிறான். அம்மையார் நடுக்குற்று
உள்ளே நுழைந்து சிவபெருமானை வேண்ட, சிவபெருமான்
அருளால் அம்மையார் தம் கரத்தே ஓரினிய மாங்கனியை
வரவழைத்து, கணவனுக்குப் படைத்தார். அக்கனியின் தெவிட்டா
இனிப்புக் கண்டு இக்கனி ஏதென்று    மனைவியை வினவ,
அம்மையார் நிகழ்ந்ததை உரைத்தார். உடனே மேலும் ஒரு கனியை
முன்போல் வரவழைக்கச் சொல்ல, அம்மையார் சிவனை நினைந்து
உள்ளமுருகி வேண்ட, அவனருளால் ஓர் அழகிய மாங்கனி அவர்
கரத்தில் விழவும் அதை அவள் கணவனிடம் சேர்த்தாள். அவன்
அதிசயித்து அக்கனியை எடுக்க முயன்ற போது அது மறைந்தது.
இந்நிகழ்ச்சி கண்ட பரமதத்தன் இவள் மானிடப் பெண் அல்லள்,
தெய்வம். இவளுடன் வாழ்தல் தவறு என்று அவளை விட்டு
நீங்கினான். பாண்டிநாடு சென்று அங்கே ஒரு பெண்ணை
மணந்தான். அங்கே    பிறந்த தன் மகளுக்குத் தன் முதல்
மனைவியின் பெயராகிய புனிதவதி என்ற பெயரைச் சூட்டி
அம்மையாரைத் தன் குல தெய்வமாக வழிபட்டு வந்தான்.

    பின்னர் அவர்தம் உறவினர் அம்மையாரை அழைத்துக்
கொண்டு பாண்டிநாடு சென்ற போது, அவன் மனைவி மகளுடன்
சேர்ந்து அம்மையார் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அவன்
நிலையுணர்ந்த அம்மையார் ஊனுடலை உதறி என்புடலைத்
தாங்கினார். இதனால் அவரைக் காரைக்கால் பேயார் என்றும்
குறிப்பிடுவார்கள். அவ்வுடல்    கொண்டு தலையால் நடந்து
கயிலைமலை    சென்றபோது அங்கே அவர் இறைவனால்
‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டார். பின்னர் இறைவன்
கட்டளைப்படி திருவாலங்காடு சென்று ஊர்த்துவ தாண்டவ
மூர்த்தியின் திருவடிக் கீழிருந்து பெறுதற்கரிய பேறு பெற்றார்
என்று பெரிய புராணம் கூறுகிறது. இன்றும் காரைக்காலில்
அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும்
நடைபெறுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:59:00(இந்திய நேரம்)