Primary tabs
பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல்கொண்ட
தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு,
தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய
ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற்
சங்கம் எனப்பட்டது.
தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன்
பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு
பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர்.
இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது.
கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப்
பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம்
தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது
கடைச்சங்கம் என்று அழைக்கப் பட்டது.
இவ்வாறு மூன்று சங்கங்கள் நடத்தப் பெற்று, புலவர்களும்,
அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்தனர்.
இம் முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று இன்று வரை
அழைக்கப் படுகிறது. இனி ஒவ்வொரு சங்கம் பற்றியும் விவரமாகக்
காணலாம்.
சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க
இலக்கியங்கள என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே
பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர்
நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம்
என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர்.
அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள்
கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க
இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள்
புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய
அவையைச் சங்கம் என்று கூறினர்.
மதுரையில் சங்கம் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததைத் தமிழ்
இலக்கியங்கள் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றன.
பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை (அடிகள் 66-67)
என்று கூறுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது மதுரையில்
தமிழ் நிலை பெற்றிருந்தது என்பது புலனாகிறது. மதுரைக் காஞ்சி
எனும் இலக்கியம்
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் (அடிகள் 761-763)
என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன
என்ற பாண்டியன் அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து
செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.
புறநானூற்றில் 72ஆம் பாடல்,
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை
என்று கூறுகிறது. இதில் சங்கத்துத் தலைவராக மாங்குடி மருதன்
என்னும் புலவர் இருந்ததும், புலவர்கள் செய்யுள் பாடியதும்
கூறப்பட்டுள்ளது.
காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ்நன்
நாட்டுத் தீதுதீர் மதுரை” என்றும், மணிமேகலை “தென்தமிழ்
மதுரைச் செழுங்கலைப் பாவாய்” என்றும் கூறுகிறது.
கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச்
சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும்
ஏழைப் புலவனுக்குக் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற
குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)
என்று கூறுகின்றார்.
திருநாவுக்கரசருக்குப் பின் வந்த பல்வேறு இலக்கிய
ஆசிரியர்களும் சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர்.
சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும்
பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு
செய்தியைக் கூறுகிறது.
மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த
பணியும் சங்கத்தில் நடந்ததை நாம் அறிகிறோம்.
வடமொழி இலக்கியமாகிய வால்மீகி இராமாயணம் சங்கம்
இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது. அந்த இலக்கியத்தில்
சீதையைத் தேடச் சென்ற வானரரை நோக்கிச் சுக்கிரீவன்
“பொதிகை மலையில் அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம்
உள்ளது; அதனைக் காண்பீர்” என்று கூறியதாக வருகிறது. பிளினி,
தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி
உரைக்கின்றனர். இலங்கைவரலாற்று நூல்களான மகாவம்சம்,
இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம்
இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால்
நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை
நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89
அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக
இறையனார்களவியல் உரை கூறுகிறது.
இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்,
குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின்
கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர்.
4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற
நூல்கள் பாடப்பட்டன.
தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில்
தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம்
நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால்
தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59
மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர்,
தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க்
காப்பியனார் போன்ற 3700 புலவர்கள் பாடினர்.
இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி,
வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.
கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள
மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம்
தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம்
அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால்
இது, தொடங்கப் பெற்றது.
இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக
49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம்
நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார்,
அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை
ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என
449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு,
குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.
முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார்
களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட
நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான
நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.
இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால்
நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால
இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.
முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின்
எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார்
களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக
இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள
காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்கமுடியும்.