தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சங்க இலக்கிய உவமைகள்

1.6 சங்க இலக்கிய உவமைகள்

சங்க இலக்கியங்கள்     உவமைகளால்     சிறப்புற்ற
இலக்கியங்களாகும். சங்க காலத்தில் தோன்றிய இலக்கண
நூலாகிய தொல்காப்பியத்தில் உவமைக்காகவே ஓர் இயல்
உண்டு. அது உவமஇயல் எனப்படும்.

சங்க அக இலக்கியங்களிலும், புற இலக்கியங்களிலும்
பெரும்பாலான பாடல்கள் உவமைகளோடு மட்டுமே
விளங்குகின்றன. எளிய உவமைகளால் மிகச் சிறந்த பொருளை
விளங்க வைப்பது சங்க இலக்கியங்களின் சிறப்பியல்புகளுள்
ஒன்று.

சோழன் போரவைக்கோப் பெரு நற்கிள்ளி போர்க்களத்தில்
விரைவாக வாளைச் சுழற்றிப் போரிடுகிறான். அவன்
போர்க்களத்தில் எவ்வாறு வாளைச் சுழற்றுவான் என்பதற்குச்
சாத்தந்தையார் என்ற புலவர்,

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
             - (புறம், 82)

என்று உவமை கூறுகிறார். அதாவது ஊரிலே விழா நடைபெற
உள்ளது அவ்விழாவிற்கு உதவப் போக     வேண்டும்;
மனைவிக்குப் பிள்ளைப்பேறு மழை பெய்து கொண்டிருக்கிறது.
பிறக்கும் குழந்தையைத் தரையில் போடமுடியாது. அதற்காகக்
கட்டில பின்னுகின்றான் ஓர் ஏழைத் தொழிலாளி.
இவ்வளவு செயல்களையும் ஒருசேரச் செய்ய மனம் விழையும்
நேரத்தில் கை எவ்வளவுவேகமாகக் கட்டில் பிணிக்குமோ
அதே வேகத்தில் சோழன் வாள் சுழற்றுகின்றான் என்கிறார்
புலவர்.

     கலித்தொகையில் ஓர் உவமை. பாலை நிலத்தின
கொடுமையைக் கூற வந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ
என்னும் புலவர்,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழல்இன்றி
யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப, விரிகதிர் தெறுதலின்    
                (பாடல் - 10)

எனப் பாடியுள்ளார். இளமையிலேயே வறுமையுற்றவன் போலத்
தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன.
கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி)
செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத்
தன்னைச் சேர்ந்தவர்களுக்கு     நிழலின்றி     இருந்தன.
யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்து தீங்கு செய்பவனின்
புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி
அவனும் கெடுவான். அதுபோல்    கதிரவனின் கதிர்கள்
சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள வேரொடே
வெம்பி நின்றன என்று     மிகச் சிறப்பான உவமையால்
விளக்குகிறார்.

இவ்வாறு சங்க இலக்கியம் முழுமையும் பல்வேறு சிறந்த
உவமைகளோடு பாடல்கள் இயற்றப்பட்டிருப்பதை அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:19:50(இந்திய நேரம்)