Primary tabs
தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது,
அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார்.
இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும்.
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (4)
என்று தொல்காப்பிய நூற்பா கூறும்.
நிலத்தைப் பற்றிக் கூறும் போது நிலத்தோடு தொடர்புடைய
தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (அகத்.5)
என்றுரைக்கின்றார், தொல்காப்பியர்.
முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றார்
காடும், காட்டைச் சார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு
உரிய தெய்வமாகத் திருமாலை மாயோன் என்ற
பெயரில்
குறிப்பிடுகின்றார்.
குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும்
என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக்
கூறுகிறார்.
‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும்
வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும்.
இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்திரனே
வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் கடவுளாகும்.
‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது
மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும்
ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக வருணன்
உரைக்கப்படுகிறான்.
பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான
தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில்
பாலைநிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். பாலை என்ற
நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப்
பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி
ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து
போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
(காடுகாண் காதை, 64-66)
என்று கூறுகிறது.
இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத்,
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார்.
நிலங்களுக்கு இடமும், கடவுளும் கூறிய தொல்காப்பியர்
அந்நிலங்களுக்குரிய காதல் ஒழுக்கங்களுக்கு ஏற்ற வண்ணம்
பெரும் பொழுது, சிறுபொழுதுகளைக் கூறுகிறார்.
பெரும்பொழுது என்றால் ஓர் ஆண்டை
இரண்டிரண்டு
மாதங்களாக - ஆறு பிரிவுகளாகப் பிரித்து அமைத்துக்
கொள்வதாகும்.
இவை
- கார்காலம்
- கூதிர்காலம்
- முன்பனிக் காலம்
- பின்பனிக் காலம்
- இளவேனிற் காலம்
- முதுவேனிற் காலம்
என அறுவகைப்படும்.
சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப்
பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது
- வைகறை
- விடியல்
- நண்பகல்
- எற்பாடு (பிற்பகல்)
- மாலை
- யாமம் (நள்ளிரவு)
எனப் பிரிக்கப்படும்.
(எற்பாடு - எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு - இளம்பூரணர்
உரை, தொல்.பொருள். 10)
முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக்
கருப்பொருள் என்று குறிப்பிடுவர். அவை தேவர்
என்றும், மக்கள் என்றும், விலங்கு என்றும் பலவாறு
பகுக்கப்படும். அங்கு வாழும் மக்கள் உண்ணுகின்ற உணவு,
செய்கின்ற தொழில் இவையும் கருப்பொருளாகும். ஒவ்வொரு
நிலத்திற்கும் உரிய தெய்வங்கள், உணவு வகைகள், மரங்கள்,
பறவைகள், செய்தொழில்கள், யாழ் போன்ற இசைக் கருவிகள்
எல்லாம் கருப்பொருள் என்பதில் அடங்கும்.
மக்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள்
எனப்படும்.
இதனை ஒழுக்கம் என்பர். இது அக வாழ்க்கைக்கும்
புறவாழ்க்கைக்கும் உரியது. புணர்தல், பிரிதல், இருத்தல்,
இரங்கல், ஊடல் என்பவற்றோடு கைக்கிளை, பெருந்திணை
ஆகியவை சேர்ந்து ஏழும் அகத்திணைக்குரிய
உரிப்பொருள்களாகக் கொள்ளப்படும்.
- வெட்சி
- வஞ்சி
- உழிஞை
- தும்பை
- வாகை
- காஞ்சி
- பாடாண்
ஆகிய ஏழும் புறத்திணைக்கு உரியனவாகும்.
- அகத்திணைகளுக்கு உரிய புறத்திணைகள்
அகப்பொருளில் கூறப்பட்ட முதற்பொருளும், கருப்பொருளும்
புறப்பொருள் இலக்கியத்திற்கும் பொருந்துவனவாகும். ஒவ்வொரு
புறத்திணையும் ஓர் அகத்திணையோடு தொடர்பு
படுத்தப்பட்டுள்ளது.
அவை கீழ்க்காணுமாறு தொடர்புபடும் எனத் தொல்காப்பியர்
கூறுவார்.