Primary tabs
பண்பாடு
சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த
தொல்காப்பியம் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட பண்பாட்டுச் செய்திகளை நாம் அறிய முடிகிறது.
அக வாழ்க்கை என்பது ஒருவனும் ஒருத்தியும் காதலிப்பது,
மணந்து கொள்வது மட்டுமல்ல. காதலிக்கும் போது ஏற்படும்
இடையூறுகள், அந்த இடையூறுகளை நீக்கப் போராடும் தலைவன்,
தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரின் செயல்பாடுகள் இன்றைய
வாழ்வோடும் ஒத்துப் போகின்றன.
திருமணத்திற்குப் பெற்றோர் ஒத்துக் கொள்ளாத நிலையில்
உடன்போக்கு நிகழுதலும் இன்றும் உள்ளதுதான்.
திருமணம் என்கிற சடங்கு, ஒரு பெண்ணைக் காதலித்து
ஏமாற்றும் இளைஞர்கள் பெருகி விட்ட சூழலில்தான் நிகழ்ந்ததாக
அறிகிறோம்.
காதல்கூட, ஒத்த குணமும், ஒத்த செல்வமும், ஒத்த பிறப்பும்
போன்ற பத்துப் பண்புகள் ஒத்திருந்தால்தான் நிகழும் எனத்
தொல்காப்பியம் கூறுகிறது.
ஆண் அக ஒழுக்கமும், புறவொழுக்கமும் உடையவனாக
விளங்கினான். பெண் இல்லத்தில் இருந்து இல்லறத்தை மட்டும்
நடத்தி மகிழ்வுற்றாள். ஆதலின் அவள் அக ஒழுக்கத்திற்கு
உரியவள் எனக் கருதப்பட்டாள். பெண் வெளிநாடு செல்லவும்,
படிக்கச் செல்லவும், போர்க்களத்திற்குச் செல்லவும் அனுமதி
கிடையாது. தினைப் புனம் காக்க மட்டுமே பெண் அனுமதிக்கப்
பட்டிருக்கிறாள். பெண், கடல் கடந்து செல்லக் கூடாது.
பெண்களுக்குக் கற்பொழுக்கம் மிகுதியும்
வலியுறுத்தப்பட்டுள்ளது. கற்பொழுக்கம் இல்லாதவள் பரத்தை என
அழைக்கப்பட்டாள். ஆண்கள் பரத்தையர் வீடுகளுக்குச் செல்வது
அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
பெண்கள் ஆண்களைத் தம் உயிரினும் மலோகக் கருதினர். ஆண்கள் தம் தொழிலையே மிகுதியும் விரும்பினர். இதனை,
வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்
மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிர்என (135)
எனவரும் குறுந்தொகைப் பாடல் வரிஅடிகளால் உணரலாம்.