Primary tabs
பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப்
பத்துப் பாடலாகப் பாடிய நூல் பதிற்றுப்பத்து. இது எட்டுத்
தொகையுள் புறத்திணை பற்றிய மற்றும் ஒரு தொகை நூல் ஆகும்.
இதைப் பற்றி விரிவாகப் படிக்க இருக்கிறீர்கள். இந்த நூலிலும்
ஆற்றுப்படைத் துறைப் பாடல்கள் (14, 40, 49, 57, 60, 67, 78, 87)
உள்ளன. அவற்றைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாமா?
கண்ணனார் பாடியவை பதிற்றுப்பத்தில் ‘இரண்டாம் பத்துப்’
பாடல்கள். மெய்ம்மறை என்பது உடம்பைப் பாதுகாக்கும் கவசம்.
இந்த வள்ளலை,,, ‘புலவர் முதலிய சான்றோர்களைப் பாதுகாக்கும்
கவசம்’ என்று உருவகமாக வாழ்த்துகிறார் புலவர்: சான்றோர்
மெய்ம்மறை (14: 12). மேலும் இவன், படை ஏர் உழவ, பாடினி
வேந்தே என்றும் (14: 17) புகழப்படுகிறான்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்தின்
பாட்டுடைத் தலைவன் ஆவான். காக்கை பாடினி நச்செள்ளையார்
பாடிய இப்பத்தில் இரு பாடல்கள் ஆற்றுப்படைத் துறையில்
அமைந்தவை. 57-ஆம் பாடலின் பெயரே சில்வளை விறலி
என்பதாகும். இதில் சேரனின் வள்ளல் தன்மையை அழகிய
தொடர்களால் பாடுகிறார்.
“எவருக்கும் அஞ்சாத சேரன், தன் மனைவி ஊடல்
கொள்ளும் போது பார்க்கும் கோபப் பார்வைக்கு மட்டும்
அஞ்சுவான். அதைக் காட்டிலும் அதிகமாக அவன் அஞ்சுவது,
நம் போன்ற கலைஞர்களுக்கு வறுமையால் வரும் துன்பத்தைக்
கண்டு மட்டும்தான்” என்று அழகாகப் பாடுகிறார்.
ஒள்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர் கொள்வன்... (57: 13-15)
(ஒள்நுதல் = ஒளிமிக்க நெற்றி; துனித்த = ஊடலால் சினந்த;
புன்கண் = துன்பம், வறுமை; புரவு = ஆதரித்தல்)
இன்னொரு பாடலில், “நிலம் மறுக்காமல் விளைவதால்
குறையாத வருவாய் கொண்டது இவனது நாடு. இதன்
காட்டுவழியில் செல்லும் நம் பசியை அங்குள்ள உறுதியான
மரத்தில் பழுக்கும் மென்மையான இனிய கனிகள் தீர்க்கும்”
என்கிறார். முட்டை போன்ற இக்கனிகளை,
“அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி” (60: 5)
என்று பாடுகிறார். மரங்களை அறுக்கும் வாள் அரம் எனப்படும்.
அந்த ‘அரத்தினால் கூடப் பிளக்க முடியாத வன்மையான
(உறுதியான) மரம். அந்த மரத்தில் பழுத்த மென்மையும்
இனிமையும் மிகுந்த கனி நம் பசி தீர்க்கும்’ என்று
பாடுகிறார். இதன் மூலம் உள்ளே அமைந்த ஒரு பொருளை
நமக்குப் புலவர் உணர்த்துகிறார். என்ன அது? எண்ணிப்
பாருங்கள்.
சேரனின் உடல், உள்ளம் இரண்டின் உறுதிப்பாடான
வீரத்தை மரமும், அவனது இனிய அன்பான
கொடைத்திறனைக் கனியும் குறிப்பாகச் சுட்டுகின்றன அல்லவா?
வசைபாடும் பகைவர்களுக்கு அவன் கொடியவன்; இசைபாடும்
கலைஞர்களுக்கு இனியவன் என்பது புரிகிறது. இந்தச் சிறப்பால்
இப்பாடலுக்கு மரம்படு தீங்கனி என்றே தலைப்பும்
தரப்பட்டுள்ளது.
இதுவரை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரு
புறத்திணைத் தொகை நூல்களிலும் உள்ள ஆற்றுப்படை பற்றிய
பாடல்களைப் பற்றிப் பல செய்திகளை அறிந்து கொண்டோம்.
மின் நூலகத்தில் உள்ள அப்பாடல்களை விரிவாகப் படித்துச்
சுவைத்து மகிழுங்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I